Rohit Sharma Wicket
Rohit Sharma Wicket X
கிரிக்கெட்

“சோம்பேறித்தனமாக விளையாடினார்”!- ரோகித் சர்மாவை விமர்சித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

Rishan Vengai

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதிலிருந்தே, ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் மீது முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது அடுத்தடுத்த போட்டியில் இந்திய கேப்டனின் மனநிலையை சிதைக்கும் முயற்சி என இந்திய ரசிகர்கள் சொன்னாலும், ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டன்சியில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சொதப்பிவருகிறார்.

மூத்தவீரரான விராட் கோலி இல்லாத நேரத்தில் பொறுப்பாக விளையாட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா, விளையாட தெரியாத வீரரை போல் மோசமான முறையில் வெளியேறுவது தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்திவருகிறது.

கடந்தமுறை விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசிய வீரர் தான், இன்றைய போட்டியில் தூக்கத்தில் விளையாடியவர்போல் வெளியேறினார். எதிரணியின் சின்னச்சின்ன தாக்குதலுக்கெல்லாம் விக்கெட்டை பறிகொடுத்து சென்றார் என்றால், ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்த கவலை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில்தான் இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அவுட்டாகி வெளியேறியதை விமர்சித்து பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்.

எப்படி இந்த பந்தில் வெளியேறினோம் என அவரே நினைத்துக்கொண்டிருப்பார்!

ரோகித் சர்மாவின் இன்னிங்ஸ் குறித்து ஜியோ சினிமாவுடன் பேசியிருக்கும் கெவின் பீட்டர்சன், “ஆரம்பத்தில் அவர்கள் ரன்களை அடிக்கும் எண்ணத்திலேயே இல்லாததுபோல் இருந்தது. பிட்ச்சில் நாம் எந்தவிதமான டர்னிங், பவுன்ஸ் எதையும் பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் பொறுமையாக விளையாடினார்கள்.

குறிப்பாக ரோகித் சர்மாவைதான் சொல்லவேண்டும், ஒரு பிளாட் டிராக்கில் அவர் பின்தங்கியிருந்தார். அதுவும் அவருடைய வெளியேற்றம், அதை என்னால் நம்பமுடியவில்லை.

Rohit Sharma Wicket

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அவுட்டாகலாம், ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்பதுதான் கேள்வி. அவர் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய பிளாட் டிராக்கில் தன்னுடைய விக்கெட்டை தானாகவே தூக்கி கொடுத்தார். அது மிகவும் சோம்பேறித்தனமான விக்கெட்டாக இருந்தது. இந்த உலகத்தில் இப்படியொரு பந்தில் எப்படி நாம் அவுட்டானோம் என அவரே நினைத்து கொண்டிருப்பார்” என கெவின் பீட்டர்சன் ரோகித் சர்மாவை விமர்சித்துள்ளார்.