மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்யவிருக்கும் சிஎஸ்கே web
கிரிக்கெட்

’விரைவில் சிஎஸ்கே மகளிர் அணி..’ உறுதிசெய்த சிஇஒ காசி விஸ்வநாதன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மகளிர் அணி விரைவில் வரும் என சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Rishan Vengai

சென்னை சூப்பர் கிங்ஸ் விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் அணி அமைக்க திட்டமிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பெண்கள் கிரிக்கெட்டில் முதலீடு செய்யும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ, மகளிர் லீக்கை விரிவாக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் தொடரும் (WPL) நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

wpl rcb champion

கடந்த 2023ஆம் ஆண்டு WPL தொடங்கும்போது மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் மட்டுமே பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகளிர் அணி இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வாரியம் அதற்கு வாய்ப்பில்லை என மறுப்பு தெரிவித்தது.

CSK

ஒருவேளை பெண்கள் கிரிக்கெட் மீதான வர்த்தகத்தின் மீது சிஎஸ்கேவிற்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அணி கட்டமைப்பதற்கான நிலையான வீரர்கள் கிடைக்கவில்லையா என்பது தெரியாமல் இருந்தது. இந்தசூழலில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே மகளிர் அணி..?

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026-ல் கலந்துகொண்ட சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜும்தாருடன் உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “எதிர்வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எங்களுடைய முதல் இலக்காக பெண்கள் கிரிக்கெட் இருக்கிறது. படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த உள்ளோம்” என கூறியுள்ளார்.

இதன்மூலம் சென்னை அணி விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் மகளிர் அணியை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல WPL பக்கபலமாக இருந்ததால், மகளிர் பிரீமியர் லீக்கை விரிவாக்கும் திட்டத்தில் பிசிசிஐ ஆலோசனை நடத்திவருகிறது. இந்தசூழலில் WPL-ல் அணிகளை கொண்டிருக்காத சென்னை, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் மகளிர் கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.