கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், சின்னசாமி மைதானத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தொடரும் என உறுதியளித்துள்ளார். மைதானத்தின் பாரம்பரிய பெருமையை இழக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், ஐபிஎல் போட்டிகள் சின்னசாமியில் நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல்லின் மூன்றாவது வெற்றிகரமான அணியாக இருந்தபோதிலும் 17 வருடங்களாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி ‘சோக்கர்ஸ்’ என விமர்சிக்கப்பட்டது. இந்தசூழலில் 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிவரை முன்னேறிய ஆர்சிபி அணி, பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து 17 வருடங்களுக்கு பிறகு முதல்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
17 வருடங்களாக தோல்வியை மட்டுமே சந்தித்திருந்தாலும், ஆர்சிபி அணிக்காக சப்போர்ட் செய்ததற்காக பல்வேறு விமர்சனங்களை ஆர்சிபி ரசிகர்கள் எதிர்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு முறை ஆர்சிபி விளையாடும்போதும் அந்த மைதானத்திற்கு படையெடுத்த ஆர்சிபி ரசிகர்கள் ‘Loyal Fans" என்ற அடைமொழியை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டனர்.
இந்தசூழலில் அணியின் கடினமான நேரங்களில் கூட ஆதரவாக இருந்த ஆர்சிபி ரசிகர்களுடன் கோப்பை வென்ற மகிழ்ச்சியை கொண்டாட்ட நினைத்த ஆர்சிபி அணி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் அங்குவந்த ரசிகர்களில் கூட்டநெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்ததும், 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம்.
இந்தசூழலில் சின்னசாமி மைதானத்தில் இனிவரும் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப்போட்டியும் நடத்தப்படாது என்றும், சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை புனேவில் விளையாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், சின்னசாமி மைதானத்தில் தான் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடக்கும் என்றும், அதன் பாரம்பரிய பெருமையை இழக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் எக்ஸ்தள பதிவில், “ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். இது பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பெருமை சார்ந்து எழுப்பப்படும் கேள்வி. ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம், மைதானத்தின் நற்பெயரைப் பாதுகாப்போம். அதுபோல மற்றொரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்” என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்ததாக பதிவிட்டுள்ளார்.