விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி? ரூ.17,000 கோடி-க்கு விற்க திட்டமா? மின்னல் வேகத்தில் பரவும் தகவல்
ஐபிஎல்லின் மூன்றாவது வெற்றிகரமான அணியாக விளங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஐபிஎல் கோப்பை வென்று மகுடம் சூடியது.
இந்த சூழலில் ஆர்சிபி கோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தின் போது 11 ரசிகர்கள் உயிரிழந்ததும், 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், கோப்பை வென்றும் ஆர்சிபி அணியால் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஆர்சிபி அணியை விற்கும் நிலைக்கு உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ பிஎல்சி சென்றுள்ளது அடிக்கு மேல் அடியாக ஆர்சிபிக்கு விழுந்துள்ளது.
ஆர்சிபி அணியை விற்க திட்டம்..
ஆர்சிபி அணியின் முந்தைய உரிமையாளரான மல்லையாவிடமிருந்து, பிரிட்டிஸ் நிறுவனமான டியாஜியோ பிஎல்சி மூலம் இயங்கும் இந்திய நிறுவனமான யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் விலைக்கு வாங்கியது.
இந்த சூழலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணியின் சில பங்குகளை அல்லது முழு அணியையே விற்கும் முடிவுக்கு யுனைடட் ஸ்பிரிட்ஸ் சென்றுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அணியை 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு, இந்திய ரூபாயில் 17,000 கோடிக்கு விற்க முடிவுசெய்திருப்பதாக தகவல் ஒன்று மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
விற்கும் முடிவுக்கு என்ன காரணம்..?
நல்ல லாபத்திற்கான நோக்கம் - 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணியின் மதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில், தற்போதுதான் நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்காக விற்பனை முடிவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
இந்திய அரசின் கட்டுப்பாடு - கிரிக்கெட் மூலம் புகையிலை மற்றும் மதுவை ஊக்குவிப்பதை நிறுத்த இந்திய சுகாதார அமைச்சகம் அழுத்தம் கொடுத்து வருவதால், இந்த முடிவுக்கு டியாஜியோ சென்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் மதுபான விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், டியாஜியோ வீரர்களை பயன்படுத்தி குளிர்பானங்களை விளம்பரப்படுத்துவதை தொடர்ந்து வருகிறது.
விராட் கோலி ஓய்வு - விராட் கோலி கிட்டத்தட்ட அனைத்துவிதமான கோப்பைகளையும் வென்றுவிட்ட நிலையில் டி20 வடிவத்தை தொடர்ந்து, டெஸ்ட் வடிவத்திலிருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டால் ஆர்சிபியின் மதிப்பு குறைந்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த முடிவுக்கு டியாஜியோ சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 ரசிகர்களின் மரணம் - ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 ரசிகர்கள் உயிரிழந்திருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 11 மரணங்களின் எதிரொலியால் கர்நாடாகா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா, ஆர்சிபி நிர்வாகிகள் கைது என சென்றுவிட்ட சூழலில், பெங்களூரு மைதானத்தையே சிட்டிக்கு வெளியில் எடுத்து செல்லவேண்டும் என்ற முடிவுக்கு அரசு சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த சூழலும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனை செய்யும் தகவலை டியாஜியோ நிறுவனம் மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.