2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி ஜனவரி 18-ம் தேதிவரை நடைபெற்றது. 38 அணிகள் பங்கேற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
5 போட்டிகளில் அவுட்டே ஆகாமல் 4 சதங்களை விளாசி உலக சாதனை படைத்த விதர்பா கேப்டன் கருண் நாயர், 700-க்கும் மேலான பேட்டிங் சராசரியுடன் தன்னுடைய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார். 8 போட்டிகளில் விளையாடிய விதர்பா அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் கெத்தாக ஃபைனலுக்குள் நுழைந்தது.
மறுமுனையில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்ட மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணி 1 தோல்வியை மட்டுமே சந்தித்து இறுதிப்போட்டியில் கால் வைத்தது.
வதோதரா கோடாம்பி ஸ்டேடியத்தில் பரபரப்பாக தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா கேப்டன் கருண் நாயர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியில் ஸ்மரன் ரவிச்சந்திரன் 101 ரன்கள், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்கள், அபினவ் மனோகர் 79 ரன்கள் என அசத்த 50 ஓவரில் 348 ரன்கள் சேர்த்தது கர்நாடகா.
349 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணியில் தொடக்க வீரர் துருவ் ஷோரே 110 ரன்கள் குவித்து போராடினாலும், மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் கைக்கொடுக்காத நிலையில் 48.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த விதர்பா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட கருண் நாயர், இறுதிப்போட்டியில் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2024-2025 விஜய் ஹசாரே டிரோபி இறுதிப்போட்டியில் வென்ற மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணி, 5வது முறையாக கோப்பை வென்று அசத்தியது. கோப்பை வென்ற கர்நாடகா அணிக்கு துணை முதல்வர் டிகே சிவகுமார் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இறுதிப்போட்டியில் சதமடித்த ஸ்மரன் ரவிச்சந்திரன் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு 8 இன்னிங்ஸ்களில் 5 சதங்களுடன் 389.50 சராசரியில் 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.