15 வயதிலேயே முதல்தர, யு19, ஐபிஎல் ஆகியவற்றில் தன் திறமையை நிரூபித்து, அயர்லாந்தில் நடைபெறும் டி20 தொடரில் தேசிய அறிமுகத்துக்குத் தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, அவர் சச்சினை நினைவூட்டுகிறார் என்றாலும் இது ஆரம்பமே என்பதால் அதிக எதிர்பார்ப்பை வைக்க வேண்டாம், இன்னும் நீண்ட பயணம் உள்ளது என்று கபில்தேவ் எச்சரிக்கிறார்.
முதல்தர கிரிக்கெட், யு19 இந்திய கிரிக்கெட்டை கடந்து ஐபிஎல்லிலும் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 15 வயதிலேயே கிரிக்கெட் உலகின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். அயர்லாந்தில் நடைபெற்றுவரும் டி20 தொடரில் தன்னுடைய தேசிய அறிமுகத்திற்காக தயாராகி வரும் சூர்யவன்ஷிக்கு, ஜாம்பவான் கபில் தேவ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சூர்யவன்ஷியை பார்ப்பது சச்சினை போல உள்ளதாக பாராட்டு தெரிவித்திருக்கும் அவர், அதே நேரத்தில் இது மிகவும் ஆரம்பக்கட்டம் என்பதால், அவரை மதிப்பிட வேண்டாம் என்று ரசிகர்களையும் நிபுணர்களையும் கேட்டுக்கொண்டார். மேலும் அந்த இளம் வீரர் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
சூர்யவன்ஷி குறித்து பேசியிருக்கும் கபில்தேவ், “வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளையவர், அவன் ஒரு 16 வயது சிறுவன், அவனிடம் இருப்பது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே. அவனுக்கு 20-22 வயது ஆகும்போது நாம் அவனை மதிப்பிடலாம். அதுவரை அவரிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்க வேண்டாம். அவனது திறமை அபாரமானது என்பதில் சந்தேகமில்லை. அவன் 15 வயதில் சச்சினை பார்ப்பதை போலவே இருக்கிறான், ஆனால் அவனால் சச்சினை போல அவ்வளவு காலம் விளையாட முடியுமா? அவன் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
அந்த இளம் வீரருக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அவர் இப்போது தான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளப் கிரிக்கெட்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பதை புரிந்துகொள்வார். அதுவரை அவரிடமிருந்து எதையும் பெரிதாக எதிர்ப்பார்க்காதீர்கள், நேரம் கொடுங்கள்” என பேசியுள்ளார்.