அமெரிக்கா வாஷிங்டன் டிசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய கனேரியா, பாகிஸ்தானில் சிறும்பான்மையினரின் அவலநிலை குறித்து பேசினார்.
அத்தோடு, கிரிக்கெட் அணியில் தனது ஒருபோதும் சமமான மரியாதை மற்றும் மதிப்பும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடிய இந்து கிரிக்கெட் வீரர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் டேனிஷ் கனேரியா, அடுத்தது அனில் தல்பத். இத்தகைய சூழலில்தான் கனேரியா அதிர்ச்சிகர கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், “நான் நிறைய பாகுபாட்டை எதிர்கொண்டேன், என் வாழ்க்கை அழிக்கப்பட்டது. பாகிஸ்தானில் எனக்கு உரிய மரியாதை மற்றும் சம மதிப்பு கிடைக்கவில்லை. இந்த பாகுபாட்டின் காரணமாக நான், இன்று அமெரிக்காவில் இருக்கிறேன். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதை தெரியப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே நாங்கள் பேசி வருகிறோம்.
நான் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். கவுண்டி கிரிக்கெட்டையும் விளையாடி வந்தேன். எனக்கு ஆதரவளித்த ஒரே கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்தான். அதன்பின், சோயிப் அக்தர் ஆதரவளித்தார். ஆனால், ஷாஹித் அப்ரிடி மற்றும் பல பாகிஸ்தான் வீரர்கள் எனக்கு தொந்தரவு கொடுத்தனர். பலர் என்னுடன் அமர்ந்து சாப்பிடவில்லை. ஷாஹித் அப்ரிடி என்னை மதம் மாறச் சொல்லியவர்களில் மிக முக்கியமானவர்” எனத் தெரிவித்துள்ளார்.
டேனிஷ் கனேரியா ஒரு லெக் ஸ்பின்னர். அவர் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறும் போது, பாகிஸ்தானுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளராக வெளியேறியவர்.
கனேரியா 2000 முதல் 2010 வரை பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கிட்டத்தட்ட 1024 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், 2012 ஆம் ஆண்டு ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதன்பின், அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.