நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஹாமில்டனில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 347 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து பவுலர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 143 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்மாக ஜோ ரூட் 32 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகள், வில்லியம் ஓரூர்கே மற்றும் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 33வது டெஸ்ட் சதமடித்து அசத்தினார். காயத்திற்கு பிறகு மீண்டுவந்திருக்கும் கேன் வில்லியம்சன் 156 ரன்கள் அடித்து தரமான கம்பேக்கை கொடுத்தார். வில்லியம்சனின் சதத்தால் 453 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 658 ரன்களை நிர்ணயித்துள்ளது.
மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.