8 அணிகள் கலந்துகொண்ட சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. துபாயில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) அதிகாரியை மேடைக்கு அழைக்க ஐசிசி தவறியது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், போட்டி இயக்குநருமான சுமைர் அகமது போட்டியின்போது மைதானத்தில்தான் இருந்துள்ளார். எனினும், தொடரின் நிறைவு விழாவிற்கு அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர்கூட அழைக்கப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் வீரர் சோயிப் அக்தர், “கோப்பையை வழங்க ஏன் பிசிபியிலிருந்து யாரும் அங்குச் செல்லவில்லை? இது சிந்திக்க வேண்டிய ஒன்று. இது உலக அரங்கம், நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், “அந்த விழா மேடையில் இந்திய அணியின் அருகில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிற்கத் தகுதியற்றவர்கள்” என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “ஐசிசி நமக்கு கண்ணாடியைக் காண்பித்துள்ளது. தொடரை நடத்தும் இயக்குநர் அங்கே இருந்தார். ஆனால் அவர் விழா மேடையில் இல்லை. ஏன், அவர் மேடையில் இல்லை? ஏனெனில், நாம் அங்கே இருக்கும் தகுதியைப் பெறவில்லை. நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. இந்தத் தொடரை பாகிஸ்தான் எவ்வாறு நடத்தியது என்பதைப் பற்றி யாரும் விவாதிக்கவில்லை. நாம் அது போன்ற கிரிக்கெட்டை விளையாடுவதாலேயே இப்படி நடத்தப்படுகிறோம்.
நீங்கள் நாட்டுக்காக அல்லாமல் உங்களுக்காக விளையாடுகிறீர்கள். அதனாலேயே இவ்வாறு மதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் வெற்றி பெற்று நல்ல கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போதுதான் நமது நற்பெயர் மீண்டும் வரும். நமக்கு பணம் கிடைத்ததும், மைதானங்களை மேம்படுத்தியதும் நமது நோக்கம் நிறைவேறியது. நமது கிரிக்கெட்டையும் மேம்படுத்த வேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. பாகிஸ்தானின் மரியாதை எங்கே போகிறது என்று நாம் சிந்திக்கவில்லை" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக, 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை நடத்திய பாகிஸ்தான், அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.