sooryavanshi - gambhir pti
கிரிக்கெட்

‘சூர்யவன்ஷியை தண்ணீர் கேன் தூக்கச்சொல்லி..’ கம்பீர் நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!

எக்ஸ்ஃபேக்டர் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை தண்ணீர் கேன் தூக்குங்கள் என சொல்லி பெரிய தவறிழைத்துவிட்டதாக கம்பீர் & கோ-ஐ கடுமையாக விளாசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சென்சேஷனாக கருதப்படும் 15 வயது சூர்யவன்ஷியை கம்பீர் நிர்வாகம் தவறாக கையாள்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். அயர்லாந்து தொடரில் நேரடியாக வாய்ப்பு கொடுத்திருந்தால், இங்கிலாந்தில் பதட்டமின்றி விளையாடியிருப்பார் என அவர் கூறுகிறார். ஆரஞ்சு கேப் வென்ற இளம் நட்சத்திரத்திடம் தண்ணீர் கேன் தூக்கச்சொல்வது நிர்வாகத்தின் குறைபாடாக கைஃப் சுட்டிக்காட்டுகிறார்.

கவாஸ்கர், சச்சின், தோனி, கோலி, ரோகித், கில் வரிசையில் இந்தியாவின் அடுத்த நட்சத்திர வீரர் அந்தஸ்தை இப்போதே சூர்யவன்ஷி எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். சச்சின், தோனி, கோலி அவுட்டாகும்வரை டிவியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள், தற்பொது 15 வயது இளம் சூறாவளி சூர்யவன்ஷியின் பேட்டிங்கை பார்க்கவும் காத்திருக்கிறார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சென்சேஷனாக வளர்ந்திருக்கும் சூர்யவன்ஷியை இந்திய அணியின் கம்பீர் நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளாசியுள்ளார். 13 டெஸ்ட் போட்டி, 125 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய முகமது கைஃப், அயர்லாந்திலேயே சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அவரது தன்னம்பிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றும், இங்கிலாந்து தொடரில் அவரால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “வைபவ் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் வீரர். அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். ஒரு சீசனில் விளையாடிவிடலாம், தொடர்ச்சியாக அவரால் இதை செய்யமுடியுமா என அனைவருடைய கவனத்தின் மையமாக இருந்தபோதிலும், ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷியின் பேட்டிங் பேசியது. அவர் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் சிறப்பாகச் செயல்படவில்லை. அவர் ஆரஞ்சு கேப்பை வென்றார். அவர் அயர்லாந்தில் விளையாடியிருக்க வேண்டும்; அப்படிச் செய்திருந்தால் அந்தப் பதற்றம் நீங்கியிருக்கும். அவர் இங்கிலாந்து சென்றடைந்து சிறப்பாகச் செயல்பட்டிருப்பார்.

ஆனால் நீங்கள் அவரிடம் முதலில் தண்ணீர் கேனை தூக்கு என்று சொன்னீர்கள். அவர் ஒரு சிறப்பான வீரர்; நீங்கள் அவரை அயர்லாந்திலேயே நேரடியாக விளையாட வைத்திருக்கலாம். அவருக்குச் சிறப்பு கவனிப்பு கிடைத்திருக்க வேண்டும். அவர் அயர்லாந்தில் விளையாடியிருந்தால், இங்கிலாந்தில் அவருக்கு எந்தப் பதட்டமும் இருந்திருக்காது" என்று பேசியுள்ளார்.

Vaibhav Sooryavanshi

அயர்லாந்து தொடரில் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சூர்யவன்ஷி, இங்கிலாந்து மண்ணில் நேரடியாக களமிறக்கப்பட்டார். அங்கு 3 டி20 போட்டிகளில் விளையாடிய அவரால் 14, 13, 15 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆர்ச்சருக்கு எதிராக முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினாலும், அவரின் வேகம் மற்றும் பவுன்சுக்கு எதிராக சூர்யவன்ஷியால் தொடர்ந்து அதை செய்யமுடியவில்லை. பின்னர் இறுதிப்போட்டியில் ஆடும் லெவனிலிருந்து டிராப் செய்யப்பட்டார்.

பின்னர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் தன்னுடைய ஃபார்மை மீட்டுவந்த சூர்யவன்ஷி, அடுத்தடுத்து 2 அரைசதங்களை அடித்து 16 வயதுக்குள் 2 சர்வதேச அரைசதங்கள் அடித்த முதல் வீரராக உலகசாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.