இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. அதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ராஜ்கோட்டில் தொடங்கி நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஸ்மிரிதி மந்தனா, பிரதிகா ரவால், ஹர்லீன் தியோல் மூன்று பேரும் 73 ரன்கள், 67 ரன்கள் மற்றும் 89 ரன்கள் என அடித்து அசத்தினார்.
இவர்களை தொடர்ந்து 4வது வீரராக களத்திற்கு வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 பவுண்டரிகளை விரட்டி 91 பந்துகளில் 102 ரன்களை அடித்து, தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். ஜெமிமா ரோட்ரிக்ஸின் அசத்தலான சதத்தின் உதவியால் 370 ரன்கள் குவித்தது இந்தியா.
அதனைத்தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 254 ரன்கள் மட்டுமே எடுத்து, 116 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக அயர்லாந்து வீராங்கனை கால்டர் ரீலி 80 ரன்களை அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.