இந்திய மகளிர் அணி வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 2025 மகளிர் பிக் பாஷ் லீக் சீசனின் எஞ்சிய போட்டிகளில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசைக்கலைஞர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருணம் நடைபெற இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன், பலாஷ் முச்சலுக்கும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சிகிச்சைப் பிறகு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, திருமண சடங்குகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இந்த நீக்கத்திற்கு, பலாஷ் முச்சல் பற்றிய பழைய காதல் வதந்திகள்தான் காரணம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஸ்மிருதியின் நெருங்கிய தோழியும் கிரிக்கெட் வீராங்கனையுமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 2025 மகளிர் பிக் பாஷ் லீக் சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இவர் அந்த தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்மிருதி திருமணத்தை முன்னிட்டு, விடுப்பு எடுத்திருந்த நிலையில், தற்போது அவரது திருமணமும் தள்ளி போயுள்ளது. இதனால் ஸ்மிருதி மிகுந்த மனஇறுக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவருக்கு இக்கட்டான நேரத்தில் ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவரது விலகல் குறித்து பிரிஸ்பேன் ஹீட் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி ஸ்வென்சன், “ஜெமிக்கு இது ஒரு சவாலான நேரமாக உள்ளது. எனவே, அவர் WBBLஇல் இனி பங்கேற்க மாட்டார் என்பது துரதிர்ஷ்டவசமானது. மீண்டும் அணிக்குத் திரும்ப முடியாதது ஏமாற்றமளிப்பதாக ஜெமி எங்களிடம் கூறினார். சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டதற்காக கிளப் மற்றும் ஹீட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே WBBL 11 தொடரில், பிரிஸ்பேன் ஹீட் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.