டிராவிட் - சச்சின் - பும்ரா web
கிரிக்கெட்

இதுவரை 4 இந்திய வீரர்கள் மட்டுமே வென்ற விருது.. சச்சின், டிராவிட் வரிசையில் மகுடம் சூடிய பும்ரா!

2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் டிரோபியை வென்று அசத்தியுள்ளார் பும்ரா.

Rishan Vengai

2024-ம் ஆண்டு கிரிக்கெட்டில் தலைசிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கிவருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி.

அந்தவகையில் சிறந்த டெஸ்ட், ஒடிஐ மற்றும் டி20 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகள், வளர்ந்துவரும் வீரர்களுக்கான விருதுகள், துணை வீரர்களுக்கான விருதுகள் மற்றும் ஆண்டின் சிறந்த அம்பயர் முதலிய விருதுகளை அறிவித்துவருகிறது.

பும்ரா

இந்நிலையில் இந்திய அணியிலிருந்து சிறந்த டி20 ஆண்கள் கிரிக்கெட்டராக அர்ஷ்தீப் சிங்கும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த ஒருநாள் பெண்கள் கிரிக்கெட்டராக ஸ்மிரிதி மந்தனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது ஜஸ்பிரித் பும்ராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

’சர் கார்பீல்ட் டிரோபி’ வெல்லும் 5வது இந்தியர் பும்ரா..

ஐசிசியின் சிறந்த விருதாக பார்க்கப்படும் ஒரு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் டிரோபியை 2024-ம் ஆண்டுக்காக பும்ரா வென்றுள்ளார். இந்த விருதை இதுவரை 4 இந்திய வீரர்கள் மட்டுமே வென்றுள்ளனர்.

dravid

முதல்முதலில் சர் கார்பீல்ட் டிரோபியை வென்றவர் ராகுல்டிராவிட் 2004-ம் ஆண்டு வென்றார். அதற்குபிறகு சச்சின் டெண்டுல்கர் 2010-ம் ஆண்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2016-ம் ஆண்டும், விராட் கோலி 2017 மற்றும் 2018 என இரண்டு வருடங்களில் வென்றிருந்தார்.

இந்த சாம்பியன் கிரிக்கெட்டர்களான 4 வீரர்களுக்கு பிறகு ஐந்தாவது இந்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா ’சர் கார்பீல்ட் டிரோபி’ வென்று மகுடம் சூடியுள்ளார்.

2024-ல் பும்ராவின் சாதனைகள்:

* 907 டெஸ்ட் பவுலிங் ரேட்டிங்கை பெற்று, ஒரு இந்திய பவுலர் பதிவுசெய்த அதிகபட்ச ரேட்டிங்குடன் முடித்தார். இதற்கு முன்னர் அஸ்வின் பெற்றிருந்த 904 ரேட்டிங் புள்ளிகளே அதிகபட்சமாக இருந்தது.

* 2024 டி20 உலகக்கோப்பையில் 4.17 எகானமி மற்றும் 8.26 பந்துவீச்சு சராசரியுடன் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா தொடர்நாயகன் விருதை வென்றார்.

பும்ரா

* 20-க்கும் கீழான பந்துவீச்சு சராசரியுடன் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார், இது வரலாற்றில் சிறந்ததாக பதிவுசெய்யப்பட்டது.

* முடிந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளுடன் பும்ரா முடித்து, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் விருதை வென்றார்.