வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 7வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்துள்ளார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 வீரர்கள் சதமடித்து அசத்தினர். 448 ரன்கள் அடித்து டிக்ளார் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை 162 மற்றும் 146 ரன்களில் சுருட்டி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். இது அவருடைய டெஸ்ட் கரியரில் 7வது சதமாக பதிவுசெய்யப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் அவர், 2 சதங்கள் 1 அரைசதத்துடன் 470 ரன்கள் சேர்த்துள்ளார். அவருடைய பேட்டிங் சராசரி 103-ஆக இருந்துவருகிறது.
மறுமுனையில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 261/2 என்ற நிலையில் விளையாடிவருகிறது. ஜெய்ஸ்வால் 131 ரன்களூடனும், கேப்டன் கில் 5 ரன்களுடனும் விளையாடிவருகின்றனர்.