ஜெய்ஸ்வால் ரன்அவுட் x
கிரிக்கெட்

கவனிக்காமல் நின்ற கோலி.. 82 ரன்னில் ஜெஸ்வால் ரன்அவுட்! 5 ஓவரில் 3 விக். இழந்த IND!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 82 ரன்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் மூலம் வெளியேறினார்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் தொடரின் வெற்றியை உறுதிசெய்யப்போகும் முக்கியமான போட்டியாக 4வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடந்துவருகிறது.

smith

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் (140 ரன்கள்), லபுசனே (72 ரன்கள்), சாம் கான்ஸ்டாஸ் (60 ரன்கள்) முதலிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்துள்ளது.

ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய ஜெய்ஸ்வால் ரன் அவுட்!

ஆஸ்திரேலியா அணியின் மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு பிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில், ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கிய மோசமான ஷாட் விளையாடி 3 ரன்னில் வெளியேறினார். நிதானமான விளையாடிய கேஎல் ராகுலை ஒரு அற்புதமான பந்தின் மூலம் போல்டாக்கி 24 ரன்னில் வெளியேற்றினார் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ்.

விரைவாக இரண்டு விக்கெட்டை இழந்தாலும் அதற்குபிறகு கைகோர்த்த கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டு வீரர்களும் ஆஸ்திரேலியாவின் பவுலர்களை டாமினேட் செய்ய ரன்கள் வேகமாக வந்தது. அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான சதத்தை எடுத்துவரும் வகையில் செட்டிலாக காணப்பட்டார். எந்த பவுலராலும் அவருடைய ஆட்டத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆனால் 40வது ஓவரில் போலண்ட் வீசிய கடைசி பந்தை லெக் சைடில் தட்டிவிட்டு ரன்னுக்கு வந்த ஜெய்ஸ்வாலை பார்க்காத கோலி பந்தை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். ஆனால் நான் ஸ்டிரைக் எண்டிற்கே வந்த ஜெய்ஸ்வால் திரும்பி செல்வதற்குள் விக்கெட் கீப்பர் கேரி ரன் அவுட்டாக்கினார். 82 ரன்னில் விளையாடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார்.

ஆனால் எதிர்ப்பாராத இந்த நிகழ்வு இந்தியாவின் இன்னிங்ஸையே புரட்டி போட்டது, ஜெய்ஸ்வால் அவுட்டான அடுத்த ஓவரிலேயே கோலி கவனச்சிதறல் உடன் அவுட்டாகி வெளியேறினார். இரண்டு வெல்செட்டில் வீரர்கள் வெளியேற, வாட்ச்மேன் ரோலில் களமிறங்கிய ஆகாஷ் தீப் டக் அவுட்டில் வந்த வேகத்தில் திரும்பினார். 5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்தியா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் நீடிக்கின்றனர்.