ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியை உறுதிசெய்யப்போகும் முக்கியமான போட்டியாக 4வது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடந்துவருகிறது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் (140 ரன்கள்), லபுசனே (72 ரன்கள்), சாம் கான்ஸ்டாஸ் (60 ரன்கள்) முதலிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்தது.
அதற்குபிறகு விளையாடிய இந்திய அணி நிதிஷ்குமார் ரெட்டியின் அசத்தலான சதத்தின் உதவியால் 369 ரன்கள் சேர்த்தது.
115 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. கடந்த போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சிக்சர்களாக அடித்து விளாசிய 19 வயது வீரர் கான்ஸ்டாஸை, இந்த இன்னிங்ஸில் மிடில் ஸ்டம்பை தகர்த்து 8 ரன்னில் வெளியேற்றினார்.
மறுபுறம் கவாஜாவை போல்டாக்கிய சிராஜ், ஸ்டீவ் ஸ்மித்தை 13 ரன்னில் வெளியேற்றி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். உடன் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ், அலெக்ஸ் கேரி என அடுத்தடுத்து வந்த வீரர்களை எல்லாம் தொடர்ச்சியாக வெளியேற்றிய பும்ரா ஆஸ்திரேலியா 91 ரன்கள் இருந்தபோதே 6 விக்கெட்டுகளை இழக்கச்செய்தார். 200வது டெஸ்ட் விக்கெட்டாக டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா அசத்தினார்.
அடுத்த 4 விக்கெட்டுகளை இந்தியா எளிதில் வீழ்த்திவிடும், டார்கெட் 250 ரன்களுக்கு குறைவாக இருந்தால் 4வது டெஸ்ட் போட்டியை வெல்லும் வாய்ப்பை இந்தியா பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது. ஆனால் லபுசனே, பாட் கம்மின்ஸ் முதலிய வீரர்களின் கேட்ச்சை தவறவிட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் மொமண்ட்டை ஆஸ்திரேலியாவின் கைகளுக்கு மாற்றிவிட்டார்.
பின்னர் ரன்களை வேகமாக எடுத்த ஆஸ்திரேலியா வீரர்கள் லபுசனே மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் ஆஸியை நல்ல நிலைமைக்கு எடுத்துவந்தனர். லபுசனே 70 ரன்கள், கம்மின்ஸ் 41 ரன்கள் சேர்க்க கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயன் மற்றும் போலண்ட் இருவரும் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை நிலைகுலையச்செய்தனர்.
4வது நாள் ஆட்டம் முடிவில் 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி 228/9 என்ற நிலையில் முடித்துள்ளது. நாளை இந்தியா விரைவில் மீதமிருக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 300+ இலக்கை துரத்துமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.