2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய தகுதிச் சுற்றில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்ததால், நான்கு முறை சாம்பியனான இத்தாலி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான பிளேஆஃப் இறுதிப் போட்டியில் செனிகாவில் உள்ள ஸ்டேடியன் பிலினோ போல்ஜே மைதானத்தில், போஸ்னியா அண்ட் ஹெர்செகோவினாவை 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், இத்தாலி பந்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து, பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனாலும், 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்திற்குப் பிறகு 1-1 என சமன் மட்டுமே செய்ய முடிந்தது. பெனால்டி ஷூட்-அவுட்டில், போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா ஐந்தில் நான்கை கோலாக்க, இத்தாலியால் ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து இத்தாலியின் தோல்வி உறுதியானதைத் தொடர்ந்து உலகக்கோப்பையில் தொடரிலிருந்து வெளியேறியது. இதன்மூலம் போஸ்னியா தனது இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு, 2014-க்குப் பிறகு முதல்முறையாக, முன்னேறியது.
முன்னதாக, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பைகளிலும் இத்தாலி வெளியேறியிருந்தது. 1934, 1938, 1982 மற்றும் 2006 என நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, தற்போது தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பைகளை தவறவிட்ட முதல் முன்னாள் சாம்பியன் என்ற மோசமான வரலாற்றைப் பதித்துள்ளது. ஒருகாலத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த இத்தாலி, தற்போது பின்தங்கி வருவது விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
அதேநேரத்தில், மற்ற ஐரோப்பிய பிளேஆஃப் இறுதிப் போட்டிகளில், செக்கியா, டென்மார்க்கை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. துர்கியே அணி கொசோவோவுக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல, ஸ்வீடன் அணி போலந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கு முன்னேறியது.