kolkatta, surya
kolkatta, surya ட்விட்டர்
கிரிக்கெட்

ISPL T10: அரையிறுதி வரை முன்னேறிய சூர்யா அணி.. கோப்பையை உச்சிமுகர்ந்த கொல்கத்தா!

Prakash J

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 6ஆம் தேதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதில், சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), மஜ்ஹி மும்பை (அமிதாப் பச்சன்), ஸ்ரீநகர் கே வீர் (அக்‌ஷய் குமார்), பெங்களூரு ஸ்டிக்கர்ஸ் (ஹிருத்திக் ரோஷன்), ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ராம் சரண்), டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா (சாயிஃப் அலிகான்) உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன. மார்ச் 13ஆம் தேதியுடன் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், முதல் 4 இடம்பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன.

அந்தவகையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம்பிடித்த மும்பை அணியை, 4வது இடம்பிடித்த சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி முதலாவது அரையிறுதியில் கடந்த 14ஆம் தேதி சந்தித்தது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சிங்கம்ஸ் அணி 9.4 ஓவர்களில் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

இதைத் தொடர்ந்து 2வது அரையிறுதியில் 2வது இடம்பிடித்த கொல்கத்தாவும், 3வது இடம்பிடித்த ஸ்ரீநகர் அணியும் மோதின. இதில் முதல் பேட் செய்த ஸ்ரீநகர் அணி 10 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

tigers of kolkatta team

இவ்விரு (மும்பை மற்றும் கொல்கத்தா) அணிகளுக்கான இறுதிப்போட்டி, நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 10 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகவும் சுலபமான இந்த இலக்கை நோக்கி பின்னர் களமிறங்கிய கொல்கத்தா, 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

முன்னதாக, அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், அந்த தகவல் பொய்யானது. அதனால், அந்த தகவல் கசிந்த உடனே அமிதாப் பச்சன் போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார். ரசிகர்களும் திரளாக குவிந்திருந்தனர்.

தங்களுடைய மஜ்ஹி மும்பை அணிக்கு அமிதாப் பச்சனும் அவருடைய மகன் அபிஷேக் பச்சனும் மைதானத்தில் உற்சாகம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அந்த அணி தோல்வியை தழுவிய போதும் வீரர்களுக்கு இது மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

சச்சின் டெண்டுல்கரும் வருகை தந்து ரசிகர்களை உற்சாகமூட்டினார்.

தன்னுடைய அணி வெற்றி பெற்றதை அடுத்து டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் சைஃப் அலி கான் தன்னுடைய மகனுடன் வெற்றியை கொண்டாடினார். சைஃப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பட்டூடி ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய அணியின் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்ட நிலையில், தற்போது இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரிலும் கோப்பையை கோட்டைவிட்டுள்ளது.