சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப்போட்டியில், ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் 45 பந்தில் 100 ரன்கள் அடித்து அசத்தினார். அவரது அதிரடி பேட்டிங்கால், ஜார்கண்ட் அணி 20 ஓவரில் 262 ரன்கள் குவித்து, தொடரின் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்குபெற்று விளையாடும் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜார்கண்ட் மற்றும் ஹரியானா அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோசியேசன் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா அணி, இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. ஜார்கண்ட் அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய கேப்டன் இஷான் கிஷன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 45 பந்தில் 10 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் சதமடித்து அசத்தினார்.
இஷான் கிஷான் 101 ரன்கள், குமார் குஷாக்ரா 81 ரன்கள் மற்றும் கடைசியாக வந்து 20 பந்தில் 40, 14 பந்தில் 31 என விளாசிய அனுகுல் ராய், ராபின் மின்ஸ் இருவரின் பேட்டிங்கால் 20 ஓவரில் 262 ரன்கள் குவித்துள்ளது ஜார்கண்ட் அணி. சையத் முஷ்டாக் அலி வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டலை குவித்தது ஜார்கண்ட் அணி.
மேலும் சையத் முஸ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் இஷான் கிஷான்.