2024 டி20, 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய இந்தியா, 2027 ஒருநாள் உலகக்கோப்பையை இலக்காக வைத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்த இஷான் கிஷனை உடனே உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கிறார்.
2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் என வரிசையாக 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள இந்திய அணி, 2027 ஒருநாள் உலகக்கோப்பையை அடுத்ததாக இலக்கு வைத்துள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு ஒருநாள் கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு கிரிக்கெட்டிலிருந்து விடைபெற காத்திருக்கின்றனர்.
ஆனால் மறுபுறம் அவர்களின் வயது அதிகரிப்பு, ஃபிட்னஸ் குறித்த கவலையில் இருக்கும் இந்திய தேர்வுக்குழு சரியான இந்திய அணியை தேர்வுசெய்வதில் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது.
இந்தசூழலில் தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் சதமடித்த பிறகு, 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடமளிக்க வேண்டும் என்ற கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்தார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் பேசிய அஸ்வின், கேஎல் ராகுல் தான் இந்தியாவின் விக்கெட் கீப்பராக முதல் தேர்வாக இருப்பார், ஆனால் உலகக் கோப்பைக்கான மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை அவ்வளவு சீக்கிரம் தேர்வுசெய்ய வேண்டாம் என நினைக்கிறேன். உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருப்பதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட்டை அவ்வளவு எளிதில் விடுவிப்பது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் பண்ட் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். கிஷன் ஒரு அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் உலகக்கோப்பைக்கான அணியில் நாம் அவசரப்பட வேண்டாம்.
ஆப்கானிஸ்தான் இங்கு வெளிப்படுத்தியிருப்பது ஒரு பந்துவீச்சுத் தாக்குதலே அல்ல. யதார்த்தமாகப் பார்த்தால், அது ஒரு தரம் குறைந்த தாக்குதல் தான். ஆப்கானிஸ்தானை நொறுக்கியதன் அடிப்படையில், உலகக் கோப்பைக்காக தென்னாப்பிரிக்காவிற்கு கிஷனுக்கு பயணச்சீட்டு வழங்குவது தவறாகும். அப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு இது மிகவும் முன்கூட்டிய முடிவாகும்” என பேசியுள்ளார்.