2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸிடம் வான்கடேவில் மோசமான தோல்வி கண்டது. டிகாக் சதம் அடித்தும், அணிக்கு 195 ரன்கள் மட்டுமே. பும்ரா 5 போட்டிகளாக ஒரு விக்கெட்டும் எடுக்காததால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இரண்டு அணிகளும் மோசமாக விளையாடிவருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சொந்தமண்ணில் மும்பையை எதிர்த்து விளையாடியது பஞ்சாப் கிங்ஸ் அணி. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் விளையாடிய மும்பை அணி 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிரடியாக விளையாடிய டிகாக் 112 ரன்கள் குவித்தாலும், அவரைச் சுற்றி மற்ற பேட்ஸ்மேன்களால் சோபிக்க முடியவில்லை.
196 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியை பதிவுசெய்தது. பிரப்சிம்ரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் குவித்து அசத்தினர். பந்துவீச்சில் மிரட்டி 3 விக்கெட்டுகளை சாய்த்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. அதிலும் நேற்றைய போட்டியில் மற்ற பவுலர்களை போலவே மரண அடி வாங்கிய பும்ரா, 4 ஓவரில் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார். பும்ரா போன்ற ஒரு மேட்ச் வின்னிங் பவுலர் விக்கெட் இல்லாமல் செல்வது மும்பை இந்தியன்ஸுக்கு பெரிய பாதகமாக அமைந்துள்ளது.
இந்தசூழலில் 5 போட்டிகளாக 0 விக்கெட்டில் எப்படி இருக்க முடியும், பெரிய பவுலர் என்றால் விக்கெட் வீழ்த்தவேண்டாமா என்ற விமர்சனம் பும்ராவை நோக்கி எழுந்துள்ளது. இந்நிலையில் தான், பும்ரா மீது தவறில்லை ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியே பரிதாப நிலையில் உள்ளதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “5 போட்டிகளில் 3 ஆட்டத்தில் அற்புதமாக பந்துவீசியுள்ளார். அதை பல ஜாம்பவான்களும் பாராட்டியுள்ளனர். ஆனால் தற்போது 2 போட்டிகளில் சிறப்பாக வீசாததால் 5 போட்டியாக விக்கெட் இல்லை என பலர் பேச ஆரம்பித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தமாகவே பரிதாப நிலையில் உள்ளது, யாரிடமும் பாசிட்டிவ் மைண்ட்செட் இல்லை, எல்லோரும் சோர்வாகவே களத்தில் உள்ளனர். அணி சிறப்பாக இருந்தால் பும்ராவும் சிறப்பாக பந்துவீசுவார், இந்த ஒரு போட்டியில் தான் அவர் 10 எகானிமிக்கு மேல் சென்றுள்ளார். அதிலும் விக்கெட் விழவில்லையே, நாம் விக்கெட் வீழ்த்த வேண்டுமே என்ற அழுத்தத்தில் ஸ்லோவர் டெலிவரி, பவுன்சர் என வீசி முயற்சித்தார், ஸ்ரேயாஸ், பிரப்சிம்ரன் நல்ல ஃபார்மில் இருப்பதால் அதை அடித்தனர். பும்ராவிற்கு சப்போர்ட் செய்யும் ஒரு பவுலர் கூட அணியில் இல்லை, அதற்கும் மேல் ஒட்டுமொத்தமாக மும்பை அணி பேக் ஃபுட்டில் உள்ளது” என பேசியுள்ளார்.