அஸ்வின் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

பத்மஸ்ரீ விருது பெறும் முதல் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வினா? பத்ரிநாத் பதிவின் FACT CHECK!

பத்மஸ்ரீ விருது பெறும் முதல் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் என பத்ரிநாத் பதிவிட்டுள்ளார். அது உண்மையல்ல. எனில், யாரந்த முதல் வீரர்?

Prakash J

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அஸ்வின்

அந்த வகையில், நேற்று பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, சமையல் கலைஞர் தாமோதரன் உள்ளிட்ட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்தும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது வலைதள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இதைவிட சிறந்த முன்னுதாரணத்தை நாம் கேட்க முடியாது. நீங்கள் இந்த விருதைப் பெற தகுதியான நபர்" எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், அவருடைய இந்தப் பதிவு தவறு எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் “தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் அஸ்வின் என அவர் குறிப்பிட்டது தவறு” என முன்னாள் வீரர் டபிள்யூ வி.ராமன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன்" என விளக்கம் அளித்துள்ளார்.

padma awards

டபிள்யூ வி.ராமன் கூற்றுப்படி, நாமும் மத்திய அரசின் 2003ஆம் ஆண்டு இணையதள விருதுப் பக்கத்திற்கு சென்று ஆய்வு செய்தோம். அதில், வெங்கட்ராகவனுக்கு அதே ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் முதன்முறையாக பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன் என உறுதியாகிறது. ஆக, டபிள்யூ வி.ராமன் கூற்றும் தெளிவாகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராகவன் வெங்கட்ராகவன் முன்னாள் வீரராக இருந்து பின்னர் அம்பயர் மற்றும் மேட்ச் ரெப்ரீ ஆகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.