hardik pandya - shreyas - ishan
hardik pandya - shreyas - ishan web
கிரிக்கெட்

"Hardik-க்கு மட்டும் தனி விதிமுறையா?” இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் குறித்து முன்னாள் இந்திய வீரர் கேள்வி!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுடனான 2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தை புதன்கிழமையான நேற்று வெளியிட்டது. வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா முதலிய 4 வீரர்கள் டாப் பட்டியலில் இணைக்கப்பட்ட அதேநேரத்தில், கடந்தாண்டு B மற்றும் C பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இந்தாண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

shreyas - ishan

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேநேரம் கடந்த 2023 உலகக்கோப்பை தொடரில் 530 ரன்கள் மற்றும் அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றியது பெரிய தண்டனை, வேண்டுமானால் கிரேடை குறைத்திருக்கலாம் என்ற கருத்தை ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

Ishan Kishan

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கும் இது பொருந்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஒருவேளை அவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் போன்ற வீரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்துமா?

இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வீரர்களை திறமையான வீரர்கள் என்று குறிப்பிட்டிருக்கும் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா ஓய்விலிருந்துவிட்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இர்ஃபான் பதான், “ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் நிச்சயம் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஹர்திக் பாண்டியா உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடதது குறித்து பேசியிருக்கும் அவர், “ஹர்திக் போன்ற வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவரும் அவரைப் போன்றவர் மற்றவீரர்களும் தேசிய கடமையில் இல்லாதபோது வெள்ளை பந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டுமா? ஒருவேளை உங்களுடைய அளவுகோள் அனைவருக்கும் பொருந்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் எதிர்பார்த்த முடிவுகளை அடையாது” என்று தெரிவித்துள்ளார்.

hardik pandya

அறுவை சிகிச்சை முடிந்து களத்திற்கு திரும்பியிருக்கும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் விதமாக டிஒய் பாட்டீல் டி20 லீக்கில் கம்பேக் கொடுத்து விளையாடினார். விரைவில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார். ஹர்திக் பாண்டியா உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத போதும் பிசிசிஐ A கிரேடில் இருப்பது குறிப்பிடத்தக்கது.