இர்ஃபான் பதான்
இர்ஃபான் பதான் web
கிரிக்கெட்

“Pak-ல எனக்கு என்ன நடந்தது தெரியுமா?”-ஜெய் ஸ்ரீ ராம் விவகாரத்தை நீட்டிக்க கூடாது என இர்ஃபான் கருத்து

Rishan Vengai

புகார் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை? ஏன்?

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் இருந்த குறிப்பிட்ட இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை பார்த்து “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பியது பெரிய பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் மைதானத்தில் நடந்த தவறான நடத்தை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வ புகாரும் அளித்துள்ளது.

ind pak match

இதற்கிடையில் ரசிகர்களின் நடத்தையை பலர் குற்றம்சாட்டினாலும், அதை தீவிரப்படுத்திவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் பாகிஸ்தானின் புகார் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் ஒரு ரசிகர் என் கண் மீது ஆணியை வீசினார்! - இர்ஃபான் பதான்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளரான இர்ஃபான் பதான், வர்ணனையாளராக பேசிக்கொண்டிருக்கும் போது அவர் இந்திய அணியில் இருந்த போது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் நடந்த மோசமான சம்பவம் குறித்து விளக்கினார்.

முகமது ரிஸ்வான்

அப்போது பேசிய அவர், ”நாங்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து பெஷாவரில் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் என் மீது ஆணியை வீசினார். அது என் கண்ணுக்கு அடியில் தாக்கியது. ஒருவேளை அது என் கண்ணில் நேரடியாக தாக்கியிருந்தால் நான் பலத்த காயம் அடைந்திருப்பேன். அப்போது ஆட்டம் 10 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. ஆனால் நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் அதைப் பொருட்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், "அப்போது நடந்த விசயத்தை நாங்கள் பாகிஸ்தான் போல் பெரிதுபடுத்தவில்லை. ரசிகர்கள் நடந்துகொண்டது குறித்து பாகிஸ்தான் பிரச்னை செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, எப்படி நன்றாக விளையாட வேண்டும்" என கவனம் செலுத்த வேண்டும் என பதான் தெரிவித்துள்ளார்.

புகார் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை? ஏன்?

பாகிஸ்தான் அளித்த புகாரை ஐசிசி தீவிரமாக எடுத்துக்கொண்டாலும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஐசிசி மற்றும் பிசிசிஐ-ல் வேலை பார்த்திருந்த முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் அவர், ”ஒழுங்கு நடவடிக்கை என்பது ஒருவர் மீது தான் எடுக்கப்படுமே ஒழிய, ஒரு கூட்டத்தின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி எந்த விதிமுறையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Real madrid / Vinicius Jr

இருப்பினும் கடந்த மே மாதம் ஸ்பானிஷ் கால்பந்து லீக்கான லா லிகா தொடரில், ரியல் மாட்ரிட் மற்றும் வலென்சியா அணிகளுக்கிடையேயான போட்டியில் பிரேசில் முன்கள வீரர் வினிசியஸ் ஜூனியர் மீது, வலென்சியா ரசிகர்கள் இனவெறி கூச்சலிட்டதை அடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ”அந்த பிரச்னையில் 7 பேர் கைது செய்யப்பட்டு, 6 அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அந்த மைதானத்தில் 5 போட்டிகள் நடக்க தடைவிதிக்கப்பட்டது”. ஒருவேளை ஐசிசி நடவடிக்கை எடுத்தால், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும், இல்லை நடவடிக்கையே எடுக்காதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கிடையில் இந்த பிரச்னையை பாகிஸ்தான் மறந்துவிட்டு தொடரில் கவனம் செலுத்தவும் வாய்ப்புள்ளது.