“Cricket-ஐ எப்படி மதிக்கணும்னு சென்னை கற்றுக்கொடுத்துள்ளது”-1999 Ind-Pak போட்டி to தோனி பேசியது வரை!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தானின் முக்கிய வீரராக கருதப்பட்ட முகமது ரிஸ்வான் அவுட்டாகி செல்லும் போது “ஜெய் ஸ்ரீ ராம்” என எழுப்பப்பட்ட அஹமதாபாத் ரசிகர்களின் முழக்கம் பேசுபொருளாக மாறியுள்ளது.
india - pakistan
india - pakistanTwitter

இந்தியா-பாகிஸ்தான் இரண்டு அணிகளுக்கு இடையேயான மோதல் என்பது எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு, உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடக்கப்போகிறது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசியக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மறுப்பு தெரிவித்தது இந்திய நிர்வாகம். அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றால் வரமாட்டோம் என தடாலடியாக மறுப்பு தெரிவித்தது.

Ind vs Pak
Ind vs PakTwitter

பின்னர் பிசிசிஐக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படாமல், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பகுதிவாரியாக நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐசிசியின் அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு வந்து விளையாடவும் ஒப்புக்கொண்டது. ஆனாலும் எங்களுக்கு பாதுகாப்பு அச்சம் உள்ளது என்று அழுத்தமாகவும் தெரிவித்தது. ஆனால் இதற்கிடையில் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளின் காரணமாக பாதுகாப்பு அச்சத்தால் தேதி மாற்றிவைக்கப்பட்டது. அப்போது இந்தியா வந்து விளையாடுவதற்கு மேலும் அச்சம் தெரிவித்தது பாகிஸ்தான் நிர்வாகம். எங்களுக்கு இந்தியா வருவதற்கு பிரச்சனை இல்லை முடிந்தால் போட்டியை அஹமதாபாத்தில் இல்லாமல், சென்னை அல்லது கொல்கத்தாவில் வையுங்கள் என்ற கோரிக்கையையும் விடுத்தது.

ind vs pak
ind vs pak

மேலும் இந்தியாவிற்கு வர ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதாக விசாவும் வழங்கப்படவில்லை. இரண்டு நாட்கள் காத்திருப்புக்கு பின் கடைசி அணியாக தான் பாகிஸ்தான் இந்தியா வந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடிய பயிற்சி ஆட்டம் கூட மூடிய கதவுகளுக்கு பின்னால் தான் நடத்தப்பட்டது. இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இடையில் தான் பாகிஸ்தானுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் விதமாக, அந்த அணியை வரவேற்பதிலும், தங்க வைப்பதிலும் அதிகப்படியான கவனம் செலுத்தியது பிசிசிஐ. இத்தகைய பிசிசிஐ-ன் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், பிசிசிஐ பாகிஸ்தானுக்கான முக்கியத்துவத்தை கடைசிவரை ஒருபடி அதிகமாகவே வைத்திருந்தது.

“ஜெய் ஸ்ரீ ராம்” என எழுப்பப்பட்ட முழக்கம்!

என்னதான் பிசிசிஐ பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவின் விருந்தினர்களாக மரியாதை அளித்தாலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது அனைத்தையும் அஹமதாபாத் ரசிகர்கள் தலைகீழாக மாற்றினர். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தானின் முக்கியவீரராக பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் அவுட்டாகி வெளியேறும் போது, அவரை பார்த்து அஹமதாபாத் ரசிகர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிட்டனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி மீதான வெறுப்பு பிரச்சாரத்தை அகமதாபாத் ரசிகர்கள் உச்சத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

கிரிக்கெட் என்பது ஒரு நாட்டின் பெருமையாகவும், தேசிய உணர்வாகவும் கருதப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. அதுவும் இந்தியாவில் அத்தகைய உணர்வில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், வீரர்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் பெருகின்றன. இருப்பினும் இவை எல்லாம் எப்போதும் எல்லை மீறாமல் தோழமையோடு, ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டாக மட்டுமே இன்றளவும் கிரிக்கெட் ஜொலித்துவந்துள்ளது. அதனால் தான் இந்த விளையாட்டிற்கு அதிகப்பட்டியான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருந்துவருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட்டின் சாராம்சத்தை உருக்குலைக்கும் விதமாக தற்போது அஹமதாபாத்தில் நடந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலான சம்பவங்கள் இதற்குமேல் நடக்காமல் தடுப்பது குறித்து கிரிக்கெட் ஆர்வலர்கள், வீரர்கள் மற்றும் நிர்வாகம் என அனைவரும் கூட்டாக சேர்ந்து கிரிக்கெட்டின் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும்.

கிரிக்கெட்டை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சென்னை கற்றுக்கொடுத்துள்ளது!

என்ன தான் தற்போது அஹமாதாபாத் ரசிகர்கள் அநாகரிகமாக செயல்பட்டிருந்தாலும், இதே போலான இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் கிரிக்கெட்டிற்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் என்பதை சென்னை ஏற்கனவே உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் இருந்துள்ளது. 1999-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஒரு நெருக்கமான போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெறும். கடைசிவரை களத்திலிருந்த சச்சின் டெண்டுல்கர் 136 ரன்களில் அவுட்டானதும், வெற்றிபெறும் இடத்திலிருந்து இந்திய அணி தோல்வியை சந்திக்கும். அப்போது சென்னை ரசிகர்கள் செய்த கண்ணியமான செயல் இன்றுவரை கிரிக்கெட்டில் ஒரு மகுத்துவமான செயலுக்கு எடுத்துக்காட்டாய் கூறப்பட்டுவருகிறது.

என்னதான் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வெற்றிபெற்றிருந்தாலும் வீரர்களின் திறமையை பாராட்டும் விதமாகவும், அவர்களின் கிரிக்கெட்டின் பைட்டிங் ஆன்மாவை மதிக்கும் விதமாகவும் சென்னை ரசிகர்கள் அனைவரும் எழுந்துநின்று பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு கரகோசங்களை எழுப்புவார்கள். அதற்கு பிறகு அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை வலம்வருவார்கள். அப்போதும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தங்களுடைய உற்சாகமான வரவேற்பை சென்னை ரசிகர்கள் தவறவிடவில்லை. இத்தகைய ஒரு அணுகுமுறையையும், கண்ணியத்தையும் இந்தியா இதற்குமேலும் தவறவிடக்கூடாது என்பதே உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக தற்போது மாறியுள்ளது.

கிரிக்கெட்டில் இதை தமிழ்நாடு ரசிகர்கள் தான் கற்றுக்கொடுத்தனர்! - தோனி

ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாடு குறித்தும், சென்னை குறித்தும், சென்னை ரசிகர்கள் குறித்தும் பேசியிருந்த முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டனான மகேந்திர சிங் தோனி, “ எனது பெற்றோர்கள் உத்திரபிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். நான் பிஹாரில் உள்ள கராச்சியில் பிறந்தவன். பின்னர் நாங்கள் ஜார்கண்டிற்கு குடிபெயர்ந்தோம். எனக்கு வேலை 18 வயதில் வேலை கிடைத்த போது நான் ரயில்வேயில் வேலை செய்த இடம் மேற்குவங்கத்தில் உள்ள காரக்பூர். அதற்கு பிறகு தான் நான் சென்னைக்கு வந்தேன். நான் நம்புகிறேன் தமிழ்நாடு மட்டுமே எனக்கு என் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. என்னை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதில் பெரிய பங்காற்றியுள்ளது.

மேலும் எனக்கு ஒவ்வொரு போட்டியையும் எப்படி மதிக்க வேண்டும், எதிரணியை எப்படி மதிக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தது தமிழ்நாடு தான். ஒவ்வொரு போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறும் போதும், தமிழ்நாடு ரசிகர்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவு அளிக்க மட்டுமே வருவார்கள். மாறாக தன் அணி மட்டுமே சிறப்பாக செயல்பட வேண்டும், எதிரணியினர் செயல்படக் கூடாது என்று ஒருபோதும் நினைத்து வரமாட்டார்கள். இது ஒருமுறை கூட சென்னையில் நடந்தது கிடையாது. இது எனக்கு கிரிக்கெட்டை எப்படி புரிந்துகொள்ள வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளது” என்று பேசியிருந்தார்.

"Sorry Pakistan" என டிரெண்ட் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்!

அகமதாபாத் நிகழ்வுக்கு பிறகு பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள், “1999 சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான்-இந்தியா போட்டி, தோனி தமிழ்நாடு ரசிகர்கள் குறித்து பேசியது, வாசிம் அக்ரம் சென்னை குறித்து பேசியது மற்றும் மேலும் சில நிகழ்வுகளை மேற்கோள் காட்டி” வட இந்தியர்கள் கிரிக்கெட்டிற்கு எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத் மைதானத்தில் நடந்ததற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக #SorryPakistan என்பதையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட், மதம் எல்லாவற்றையும் கடந்து பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் விருந்தினர்கள் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் விருந்தினர்கள் எப்படி மதிக்கப்படவேண்டும் என்ற நாகரிகம் காலங்காலமாக உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் இருந்துவருகிறது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com