துப்பாக்கி சுடுவதை போல சைகை காட்டிய ஃபர்ஹான் மற்றும் 6-0 என சைகை செய்த ஹாரிஸ் ராஃப் இருவரையும் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் சாடினார்..
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இரண்டு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். அது களத்திற்கு உள்ளே மட்டுமில்லாமல், களத்திற்கு வெளியேயும் வெளிப்பட்டது.
போட்டியின் போது சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்ற வீரர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் செய்த துப்பாக்கி செலப்ரேஷன், கோலி கோலி என ரசிகர்கள் கோஷமிட்டதற்கு ஹாரிஸ் ராஃப் காட்டிய 6-0 என்ற சைகை என கிரிக்கெட் களம் போர்க்களமாக மாறியது..
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தன. பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்தவுடன் பேட்டை கையில் பிடித்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவதுபோல காட்டினார்.
அதேபோல மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் ஒரு விமானம் பறந்துகொண்டிருப்பது போலவும் திடீரென அது கீழே விழுவது போலவும் சைகை செய்து காட்டினார், மேலும் 6 என்ற எண்ணிக்கையும் அவர் கை விரல்களால் காட்டினார். இந்தியாவின் 6 விமானங்களை ஆபரேஷன் சிந்தூரின்போது வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், அதை மறைமுகமாக கூறும் வகையில் ஹாரிஸ் ராஃப் செய்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்பாடுகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் இர்ஃபான் பதான், "பாகிஸ்தான் வீரர்களின் கொண்டாட்டங்களைப் பற்றி நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன். சாஹிப்சாதா ஃபர்ஹான், இரு தரப்பினருக்கும் இடையிலான பதட்டங்கள் உங்களுக்குத் தெரிந்தும் அதைசெய்தீர்கள். ஹாரிஸ் ராஃப் ஒரு ஒழுக்கமான மனிதர் என்று நான் நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை ஆஸ்திரேலியாவில் கூட சந்தித்தேன். ஆனால் நேற்று அவர் களத்தில் செய்த சைகைகள் தேவையற்றவை. இது இரண்டு பேரின் இயல்பு என்ன என்பதையும், அவர்கள் என்ன மாதிரியான பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்கிறது" என்று இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
மேலும் "களத்தில் கிரிக்கெட் விளையாடும்போது வீரர்கள் இப்படி தாழ்ந்து போவது மிகவும் மோசமானது. ஆனால் எனக்கு இவர்கள் செய்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. அவர்கள் இதைச் செய்ய வல்லவர்கள். டிவியில் நீங்கள் பார்த்தது மோசமாக இருந்தது, ஆனால் திரைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள், ரசிகர்கள் அதைப் பற்றி அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள்" என்று பேசியுள்ளார்.