கேப்டன் பொறுப்பை வகிப்பவர் அனுபவ வீரராகவே இருந்தாலும், அணியை வழிநடத்த வேண்டிய நெருக்கடி நிச்சயம் இருக்கும். அதுவும் பலம் வாய்ந்த அணிகளை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் நடப்பு இங்கிலாந்து தொடரில், கேப்டனாக அறிமுகமாகியுள்ள சுப்மன் கில், எவ்வித பதற்றமும் இன்றி ரன் குவிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.
முதல் இன்னிங்சில் 269 ரன்கள் விளாசியஅவர், இரண்டாவது இன்னிங்சில் 161ரன்களை குவித்தார். இதன் மூலம் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கரின் 54 ஆண்டு கால சாதனையை முறியடித்திருக்கிறார்.1971ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்திருந்ததே, ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த பட்டியலில் வி.வி.எஸ் லட்சுமண் 340ரன்களுடன் 3ஆவது இடத்திலும், சவுரவ்கங்குலி 330 ரன்களுடன் 4ஆவதுஇடத்திலும், 319 ரன்களுடன் வீரேந்திர சேவாக் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், இந்திய அணிக்காக கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய தொடரில் 449 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். ஆனால் இன்னும் 3 போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில், 2 ஆட்டங்களிலேயே 500 ரன்களை கடந்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் சுப்மன் கில்.
தடுமாற்றம் இல்லாமல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கில்லால், மற்றொரு மைல் கல்லை எட்டியுள்ளது இந்திய அணி. டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆயிரம் ரன்களை குவித்துள்ளது இந்தியா. இந்தபட்டியலில் ஆயிரத்து 121 ரன்களுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. ஆயிரத்து 78 ரன்களுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், ஆயிரத்து 28 ரன்களுடன் ஆஸ்திரேலியா 3ஆவது இடத்திலும், ஆயிரத்து 14 ரன்களுடன் இந்திய அணி நான்காவது இடத்திலும் உள்ளன. கேப்டன் சுப்மன் கில் தலைமையிலானஇந்திய அணி இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.