இந்தியா எக்ஸ் தளம்
கிரிக்கெட்

U19 ஆசியக்கோப்பை: இலங்கையை சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் U19 ஆசியக்கோப்பை தொடரில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Prakash J

11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், தலா 4 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின.

இதில், பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஓர் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - இந்தியா அணிகள் சந்தித்தன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய துல்னித் சிகேரா 2 ரன்னிலும், புலிந்து பெரேரா 6 ரன்னிலும் வெளியேறினர். ஆனால், தொடர்ந்து களம் இறங்கிய சாருஜன் சண்முகநாதன் (42 ரன்), லக்வின் அபேசிங்க (69 ரன்) இருவரும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, பின்னர் வந்த எந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் விக்கெட்கள் சீட்டுக்கட்டுபோல் சரியத் தொடங்கியதுடன் ரன் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. இறுதியில் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மாத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவும், வைபைவ் சூர்யவன்சியும் நிலைத்து நின்று ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் வைபவ் அரைசதம் அடித்து அசத்தினார். என்றாலும் இந்த இணை பிரிந்தது. ஆயுஷ் 34 ரன்களிலும் வைபவ் 67 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஆண்ட்ரே சித்தார்த்தும், கேப்டன் முகமது அமானும் அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்வதில் கவனம் செலுத்தினர்.

அதேநேரத்தில் சித்தார்த் 22 ரன்களிலும் வெளியேறினாலும், பொறுப்புணர்ந்து ஆடிய கேப்டன் முகமது இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 21.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் முகமது 25 ரன்களுடனும், கார்த்திகேயா 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மற்றோர் அரையிறுதியில் வங்கதேசமும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. அதில் வங்கதேசம் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து வங்கதேச அணியுடன் இந்திய அணி, இறுதிப் போட்டியில் விளையாடும்.