இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் சூழலில், சைலண்ட்டாக மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து என நான்கு நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெற்றது.
ஜனவரி 12 முதல் ஜனவரி 21-ம் தேதிவரை டி20 கிரிக்கெட் தொடராக நடத்தப்பட்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மாற்றுத்திறனாளிகள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கையில் கட்டுநாயக்கா FTZ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்களை குவித்து அசத்தியது. அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 182.50 ஸ்டிரைக் ரேட்டில் 73 ரன்கள் குவித்த யோகேந்திர படோரியா இந்தியாவின் கோப்பை கனவிற்கு உயிரூட்டினார்.
198 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர் முடிவில் 118 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தியாவின் ராதிகா பிரசாத் 3.2 ஓவர்களில் 4/19 என்ற ஸ்பெல்லில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்தினார். கேப்டன் விக்ராந்த் கெனி மூன்று ஓவர்களில் 2/15 என தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபியை வென்று உலக சாம்பியனாக மாறியது இந்திய அணி.