india team
india team twitter
கிரிக்கெட்

IND vs ENG | அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து... கடைசி டெஸ்ட்டிலும் இந்தியா அபார வெற்றி!

Prakash J

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்றிருந்தது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கடந்த மார்ச் 7ஆம் தேதி இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் முடிவில் இந்திய அணி இன்று தொடரை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

முன்னதாக 5-வது டெஸ்ட்டில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் அந்த அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் அதே நாளில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், தேவ்தத் படிக்கல் சர்ஃப்ரஸ்கான் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் இந்திய அணி 400 ரன்களைத் தாண்டியது. இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 477 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் (103), சுப்மன் கில் (110) ஆகியோர் சதமடித்தனர். ஜெய்ஸ்வால் (57), படிக்கல் (65), சர்ஃப்ரஸ்கான் (56) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோகிப் பஷீர் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னர் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சுருண்டது. அந்த அணியில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த வீரர்களும் தொடக்க வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால், அந்த அணி தோல்வியைத் தழுவியது. இறுதியில் அந்த அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது, அவருக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.