india womens team x page
கிரிக்கெட்

IND Vs SL T20 | அறிமுகமான தமிழக வீராங்கனை கமலினி.. தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

5 போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

Prakash J

5 போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 4 போட்டிகளிலும் இந்தியாவே வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், 5ஆவது மற்றும் கடைசிப் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இந்தியாவும் ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கையும் களமிறங்கின. ஏற்கெனவே 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங் தாகூருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

ஹர்மன்ப்ரீத் கவுர், கமலினி

அதேநேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் குணாளன் கமலினி, தனது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி, முதலில் இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. அதன் தொடர்ச்சியாக இந்திய தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாமும் கமலினியும் இன்னிங்ஸைத் தொடங்கினர். கடந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட ஷபாலி வர்மா இந்தமுறை வெறும் 5 ரன்னில் ஏமாற்றினார்.

மறுபுறம் தனது முதல் போட்டியில் விளையாடிய கமலினியும் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த ஹர்லீன் டியோலும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். ஆனால், கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். அதற்குப் பின் களமிறங்கிய ரிச்சா கோஷ் 5 ரன்னிலும், தீப்தி சர்மா 7 ரன்னிலும் வெளியேறினாலும், அமோன்சத் கவுர் 21 ரன்களும் அருந்ததி ரெட்டி 27 ரன்களும் எடுக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா, ராஷ்மிகா, அத்தப்பட்டு ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா 65 ரன்களும் இமிஷா துலானி 50 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்தது.

ஹர்மன்ப்ரீத் கவுர்

இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தவிர, இந்திய அணி தொடரையும் 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நேற்றையப் போட்டியில் ஆட்ட நாயகி விருதை கேப்டன் ஹர்மன்ப்ரீத் பெற்றார். இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய மகளிர் அணிக்காக அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை அவர் சமன் செய்தார். இருவரும் தலா 12 முறை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தலா 8 முறைகளுடன் ஸ்மிருதியும் ஷபாலி வர்மாவும் உள்ளனர்.