இன்னும் 62 ரன்கள்தான்.. ஷுப்மன் கில் சாதனையை முறியடிக்கப் போகும் ஸ்மிருதி மந்தனா!
இன்றையப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 2025ஆம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளிலும் இந்தியாவே வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், 5ஆவது மற்றும் கடைசிப் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெற இருக்கிறது. தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இந்தியாவும் ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கையும் போராடும் என்பதால், இன்றையப் போட்டியும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இந்த நிலையில், இன்றையப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 2025ஆம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
ஸ்மிருதி மந்தனா, இந்த ஆண்டில் இதுவரை 1,703 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ரன்னே, ஓர் ஆண்டில் ஒரு வீராங்கனை எடுத்த அதிகபட்ச ரன்னாக உள்ளது. அதேநேரத்தில், இந்த ஆண்டில் ஆண்கள் தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 1,764 ரன்களுடன் ஷுப்மான் கில் முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க ஸ்மிருதிக்கு இன்னும் 62 ரன்கள் மட்டுமே தேவை. அதை, இன்றையப் போட்டியில் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக, 28 வயதான ஸ்மிருதி, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை மற்றும் ஒட்டுமொத்தமாக நான்காவது வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது, அவர் இந்த மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

