கில், ஸ்ரேயாஸ் pt web
கிரிக்கெட்

நெருப்பாக ஸ்ரேயாஸ்.. நிதான ஆட்டத்தில் கில்... இந்தியா அதிரடி வெற்றி..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அங்கேஷ்வர்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில் இன்று ஒருநாள் தொடர் தொடங்கியது.

ஸ்ரேயாஸ் ஐயர்

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியாவில் ஜெய்ஸ்வாலும், ஹர்ஷித் ராணாவும் தனது முதல் ஒருநாள் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். விராட் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு நேற்றிரவு முழங்கால் பிரச்னை ஏற்பட்டதாக டாஸின் போது ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஷமி வெகு நாள் கழித்து சர்வதேச ஒருநாள் போட்டியில் மீண்டும் பந்து வீசினார்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52 ரன்களையும், ஜேக்கப் 51 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். ஷமி, அக்சர், குல்தீப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

ஜடேஜா, ஹர்ஷத் ராணா, ரோகித்

249 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்களுக்கும், கேப்டன் ரோகித் 2 ரன்களுக்கும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். ரோகித் சர்மா கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 16 இன்னிங்ஸில் களமிறங்கி மொத்தமாகவே 166 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 10.37 ஆக உள்ளது.

பின் இணைந்த ஸ்ரேயாஸும் சுப்மன் கில்லும் அதிரடியாக ஆடி வேகமாக ரன்களைச் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் இங்கிலாந்து பௌலர்களை சிதறடித்த நேரத்தில், கில் அமைதியான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் 59 ரன்களில் வெளியேறியபின், சற்றே கியரை மாற்றி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவருடன் இணைந்த அக்சர் படேலும் தன்பங்கிற்கு அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை மட்டுமே இழந்து 251 ரன்களை 38.4 ஓவர்களில் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கில் 89 ரன்களையும், ஸ்ரேயாஸ் 59 ரன்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.