பதும் நிசாங்கா - அர்ஷ்தீப் சிங் cricinfo
கிரிக்கெட்

இந்தியா vs இலங்கை| பதும் நிசாங்காவின் சதம் வீண்.. சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

2025 ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவரில் த்ரில் முடிவை எட்டியது.

Rishan Vengai

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தின.

இந்தியா - இலங்கை

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இந்திய அணி 202 ரன்கள் அடிக்க, இரண்டாவது பேட்டிங் செய்த இலங்கை அணியும் 202 ரன்கள் அடித்து போட்டி சமன்செய்யப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவர்வரை சென்ற போட்டியில் இந்தியா எளிதாக இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது.

பதும் நிசாங்காவின் சதம் வீண்..

துபாயில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய சொல்லியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 22 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். அதற்குபிறகு வந்த சஞ்சு சாம்சன் 39 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடிக்க இந்திய அணி 20 ஓவரில் 202 ரன்கள் சேர்த்தது.

Pathum Nissanka

203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரராக விளையாடிய பதும் நிசாங்கா இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்தில் அதிரடியாக சதம் விளாசிய நிசாங்கா, 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 58 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்தினார்.

இறுதி பந்தில் 3 ரன்கள் தேவையிருக்க தசுன் ஷனகா அடித்த பந்து லாங்க் ஆன் பீல்டரிடம் சென்றது. ஆனால் ஃபீல்டர் பந்தை மிஸ் செய்ததை கவனிக்காத ஷனகா 2 ரன்களை முடிந்தபிறகு டைவ் செய்தார். 3வது ரன்னிற்கு நான் ஸ்டிரைக்கில் இருந்த ஜனித் லியாங்கே தயாராக இருந்தபோதும் இலங்கை நல்லவாய்ப்பை ஷனகாவால் தவறவிட்டது. இரண்டு அணிகள் 202 ரன்களே அடிக்க போட்டி சமன்செய்யப்பட்டு முடிவு சூப்பர் ஓவரை நோக்கி சென்றது.

அர்ஷ்தீப் சிங்

சூப்பர் ஓவரில் அதிகம் பந்துவீசி அனுபவம் பெற்றவரான அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதற்கு பிறகு விளையாடிய இந்திய அணியில் களமிறங்கிய சூர்யகுமார் மற்றும் கில் ஜோடி முதல் பந்திலேயே இலக்கை எட்டி வெற்றியை தேடித்தந்தது. பல ட்விஸ்ட் மற்றும் டர்னிங்குடன் நடந்த போட்டி நடப்பு ஆசியக்கோப்பையில் சிறந்த போட்டியாக அமைந்தது.