கேஎல் ராகுல் 176*.. சாய் சுதர்சன் 100.. ஆஸ்திரேலியா A அணியை தோற்கடித்த இந்தியா A!
கேஎல் ராகுல் மற்றும் சாய் சுதர்சனின் சதங்கள் உதவியால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா ஏ.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா ஏ அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
சதம் விளாசிய ராகுல், சுதர்சன்..
பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியே ஏ அணி 420 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா ஏ அணி 194 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சியளித்தது.
அந்தநேரத்தில் ஆஸ்திரேலியா வென்றுவிடுமோ என்ற சூழல் உருவான போது, பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த இந்தியா 185 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டியது.
அதற்குபிறகு இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில் சதமடித்த சாய் சுதர்சன் அசத்தினார். அவரைத்தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 176* ரன்கள் அடித்த கேஎல் ராகுல் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதன்மூலம் இந்தியா 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.