U19 CWC semi final
U19 CWC semi final PT web
கிரிக்கெட்

U19 CWC 2024 | ஒரு போட்டியில் கூட தோல்விபெறாத இந்திய அணி! அரையிறுதி கோட்டை கடக்கப்போவது யார், யார்?

Rishan Vengai

2024ம் ஆண்டுக்கான ஐசிசி யு-19 உலகக்கோப்பை தொடர், தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் A, B, C, D என நான்குபிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தின.

நடந்துமுடிந்த லீக் சுற்றுப்போட்டிகளில் விளையாடி ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்த சுற்றான சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்று விளையாடின. லீக் சுற்றில் பின்தங்கிய அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நமிபியா, ஆப்கானிஸ்தான் முதலிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டு இதர 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. நடந்துமுடிந்த 3 குரூப் போட்டிகளிலும் சிறந்த ரன்ரேட்டுடன் வெற்றிபெற்ற இந்திய அணி, கூடுதல் நான்குபுள்ளிகளுடன் சூப்பர் 6 சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் 6 சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுவந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு செல்லும் தகுதியை பெற்றுள்ளன.

அரையிறுதி 1: தோல்வியே சந்திக்காத இந்தியா vs சொந்த மண்ணில் ஆடும் தென்னாப்பிரிக்கா

நடப்பு யு19 உலகக்கோப்பை தொடங்கியதிலிருந்தே ஒரு வலுவான அணியாக களமிறங்கிய இந்தியா, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு போட்டியில் கூட தோல்விபெறாமல் வெற்றிநடை போட்டுவருகிறது. பேட்டிங்கில் முஷீர் கான், அர்ஷின் குல்கர்னி, உதய் சஹாரன், சச்சின் தாஸ் என 4 இந்திய வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளன. அதில் சர்ஃபராஸ் கான் தம்பி முஷீர் கான் இரண்டு சதங்களை பதிவுசெய்து சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேபோல பவுலிங்கில் சௌமி பாண்டே 15 விக்கெட்டுகளும், நமன் திவாரி 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

musheer khan

லீக் சுற்று மற்றும் சூப்பர் 6 என இரண்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி குரூப் 1 புள்ளிப்பட்டியலில் முதலிமிடம் பிடித்த நிலையில், குரூப் 2-ல் இரண்டாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணியுடன் முதல் அரையிறுதியில் மோதுகிறது. இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி அதே வெற்றியுடன் தொடர போகிறதா, இல்லை சொந்த மண்ணை பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா வெற்றியை சூடி இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகிறதா என்பது பிப்ரவரி 6ம் தேதி தெரிந்துவிடும்.

அரையிறுதி 2: தோல்வியே சந்திக்காத பாகிஸ்தான் vs பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா

நடப்பு யு19 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை விட பவுலிங்கில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரர் ஷாஜாய்ப் கான் மட்டுமே ஒரு சதமடித்து அசத்தியுள்ளார். மற்றபடி வேறு எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இளம் வீரர் உபைத் ஷா மட்டும் வேகப்பந்துவீச்சில் கலக்கி வருகிறார். 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கும் உபைத் ஷா, பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளரான நஷீம் ஷாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ubaid sha

ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றுப்போட்டிகளில் ஒரு தோல்வி கூட பெறாமல் சூப்பர் சிக்ஸுக்கு தகுதிபெற்றாலும், சூப்பர் 6 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தடுமாறியது. அந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த இரண்டு அணிகளும் 2வது அரையிறுதி போட்டியில் பிப்ரவரி 8ம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

Sam Konstas

இந்த 4 அணிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பிப்ரவரி 11 ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.