india team SKY x page
கிரிக்கெட்

Asia cup 2025 | பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா.. கைகுலுக்காத வீரர்கள்.. காரணம் என்ன?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திய நிலையில், அவர்களுடன் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Prakash J

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திய நிலையில், அவர்களுடன் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா

8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும், ஷாகீன் அப்ரிடி 33* ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், பும்ரா மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பின்னர், 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் இறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் சூர்ய குமார் யாதவ் இறுதிவரை களத்தில் நின்று, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 47 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சயீம் அயூப் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

india team

கைகுலுக்காத இந்திய வீரர்கள்

மறுபுறம், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அரசியல் சர்ச்சையுடன் முடிந்தது. சமீபத்திய பஹல்காம் மோதல் காரணமாகவே, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் காரணமாக பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் போட்டி நடைபெறும் மைதானத்திற்குச் செல்லவில்லை. டாஸ் நிகழ்வின்போதுகூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் வழக்கம்போல கை குலுக்காமல் இருந்தனர். போட்டி முடிந்தபின், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் உடனடியாக இந்திய அணியின் ஓய்வறைக்குச் சென்றனர். அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.

”ஆயுதப்படை வீரர்களுக்குச் சமர்ப்பணம்”!

போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் சூர்யகுமார் யாதவ், ”பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்; நமது ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

india team

கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகம் மறைவதற்குள், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்துவதா என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தேசபக்தி உணர்வை பணம் மற்றும் அதிகாரத்திற்காக பாஜக அரசு விட்டுக் கொடுத்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தின்போது, பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பாலாசாஹேப் தாக்கரே இருந்திருந்தால் இந்தப் போட்டி நடந்திருக்காது என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். அதேபோல், இந்த போட்டிக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷுபம் திவேதியின் மனைவி ஐஷான்யா திவேதியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.