indian cricket team
indian cricket team pt web
கிரிக்கெட்

IND vs IRE | இந்தியா vs அயர்லாந்து முதல் டி20: இந்திய அணியின் பாசிடிவ்களும்.. நெகடிவ்களும்..!

Viyan

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அந்த அணியின் பேரி மெகார்தி கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அயர்லாந்து அணியை மீட்டெடுத்தார்.

அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. ஆனால் ஏழாவது ஓவரை வீச வந்த கிரெய்க் யங் அந்த ஜோடியைப் பிரித்தார். 46 ரன்களில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழக்க, மூன்றாவது வீரராகக் களமிறங்கிய திலக் வர்மா அதற்கடுத்த பந்தே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அடுத்த 2 பந்துகளில் கனமழை பெய்ய ஆரம்பிக்க ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகும் மழை குறையாததால் ஆட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. DLS முறைப்படி இந்திய அணி 2 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் 2 பாசிடிவ்களும், 2 நெகடிவ்களும் என்ன எனப் பார்ப்போம்.

பாசிடிவ் 1: ஜஸ்ப்ரித் பும்ராவின் கம்பேக்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா, இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கம்பேக் கொடுத்தார். முதல் பந்தை தவறான லைனில் வீசி பௌண்டரி கொடுத்த அவர், இரண்டாவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தி தான் யார் என்பதை நிரூபித்தார். அதே ஓவரில் தன் இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர்.

தன் டிரேட் மார்க் யார்க்கர்களை அவ்வப்போது வீசிய பும்ரா, 4 ஓவர்கள் முழுமையாக வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட்டுகள் கொடுத்தது, சிக்கனமாகப் பந்துவீசியது எல்லாம் கடந்து, அவர் 4 ஓவர்களும் பந்துவீசியதே நல்ல விஷயம். முந்தைய வேகம் சற்று குறைந்திருக்கிறது என்றாலும், அது போகப் போக திரும்பிவிடும். எல்லா வேகப்பந்துவீச்சாளர்களின் கம்பேக்கும் இப்படித்தானே இருந்திருக்கிறது!

பாசிடிவ் 2: பழைய பிரசித் கிருஷ்ணாவின் வருகை

பும்ராவைப் போலவே பெரும் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் அரங்குக்குத் திரும்பினார் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா. ஒருநாள் அணியில் முக்கிய அங்கமாக விளங்கிக்கொண்டிருந்தவர், இப்போது டி20 அரங்கில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே தன் டிரேட் மார்க் பௌன்சர்களை வீசி அயர்லாந்து பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தார் பிரசித்.

பும்ராவைப் போல் இவராலும் தன்னுடைய பழைய வேகத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் பௌன்சர்களைக் கைவிடாமல் அதை தன் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தியது மிகவும் பாசிடிவான விஷயம். முதல் இரு ஓவர்களிலும் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்திய பிரசித், கடைசி இரு ஓவர்களில் சற்று அதிக ரன்கள் கொடுத்தார். இருந்தாலும் அவரது பௌன்சர்கள் நிச்சயம் இந்திய அணிக்குப் பெரும் பலம்.

நெகடிவ் 1: டெத்தில் தடுமாறிக் கொண்டே இருக்கும் ஆர்ஷ்தீப்

ஆர்ஷ்தீப் சிங்கின் டெத் தடுமாற்றம் இந்தத் தொடரில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. முதல் 2 அல்லது 3 ஓவர்களை எவ்வளவு சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும், கடைசி ஓவரை சம்பந்தமே இல்லாமல் தான் வீசிக்கொண்டிருக்கிறார் அவர். இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்களை வாரி வழங்கினார் அவர்.

அதாவது அயர்லாந்தின் 17 சதவித ரன்களை ஒரே ஓவரில் வழங்கினார். இது இந்தப் போட்டியில் மட்டும் நடந்ததல்ல என்பது தான் பெரும் பிரச்சனை. தன்னுடைய பலத்தை பயன்படுத்தாமல் அவர் அதிக வேரியேஷன்களை முயற்சி செய்வதும் இதற்கு ஒரு காரணம். இன்னும் அவர் அதை சரிசெய்யவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

நெகடிவ் 2: இன்னும் பேட்டிங் ஆர்டரில் சொதப்பும் இந்திய அணி

தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் முடிவுகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன. நம்பர் 4 மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு திலக் வர்மா அதற்கான பதிலாக கருதப்பட்டார். ஆனால் இந்தப் போட்டியில் அவரை நம்பர் 3 பொசிஷனில் களமிறக்கியது இந்திய அணி.

திலக் வர்மா

லெஃப்ட் - ரைட் காம்பினேஷனுக்காக என்று சொல்லலாம். ஆனால் அது நிச்சயம் சரியான முடிவு அல்ல. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பட்டையைக் கிளப்பிய திலக், இப்போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்திய அணி இந்த பேட்டிங் ஆர்டர் சொதப்பல்களை இப்போதைக்கு சரி செய்வதாகத் தெரியவில்லை.