19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஹோகன் 92 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் வேதந்த் திரிவேதியும் நிலைத்து நின்று ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தவிர, இருவரும் செஞ்சுரி அடித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான ஸ்கோரை நோக்கிச் சென்ற இந்திய அணி, 428 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் சூர்யவன்ஷி 86 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸருடன் 113 ரன்கள் எடுத்தார். வேதந்த் திரிவேதி 192 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய கிளேன் படேல் 49 ரன்கள் எடுத்தார். பின்னர் 185 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்ஸிலும் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபொல் கிளென் படேலும் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்.7ஆம் தேதி மெக்கேவில் தொடங்குகிறது. இவர்களுடனான ஒருநாள் தொடரை 3-0 என யு-19 இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.