52 பந்தில் சதம்.. 143 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி.. U19 கிரிக்கெட்டில் முதல் வீரராக வரலாறு!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய யு19 அணி, இங்கிலாந்து யு19 அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
5 ஒருநாள் போட்டிகள் நடந்துவரும் சூழலில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்ற நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.
இந்த சூழலில் 3வது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷியின் அதிரடியான 86 ரன்கள் ஆட்டத்தால் வென்ற இந்திய யு19 அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், சூர்யவன்ஷியின் அற்புதமான சதத்தின் உதவியால் 3-1 என தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய யு19 அணி.
52 பந்தில் அதிவேகமாக சதமடித்து சாதனை!
வொர்செஸ்டரில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய யு19 அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 13 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய வைபவ் சூர்யவன்ஷி 52 பந்தில் சதமடித்து அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 143 ரன்களும், விஹான் மல்ஹோத்ரா 121 பந்தில் 129 ரன்களும் அடிக்க 50 ஓவரில் 369 ரன்கள் குவித்தது இந்திய யு19 அணி.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து யு19 அணி, 45.3 ஓவரில் 308 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை பெற்றிருக்கும் இந்திய யு19 அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.
புதிய வரலாறு படைத்த சூர்யவன்ஷி!
இங்கிலாந்துக்கு எதிராக 52 பந்தில் சதமடித்ததன் மூலம், யு19 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த முதல் வீரராக வரலாறு படைத்தார் சூர்யவன்ஷி. ஏற்கனவே 53 பந்தில் இந்த சாதனையை வைத்திருந்த பாகிஸ்தானின் கம்ராம் குலாம் ரெக்கார்டு முறியடிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் யு19 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 சிக்சர்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.