ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 9வது முறையாகவும், பாகிஸ்தான் அணி 5வது முறையாகவும் நுழைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாள் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றன. இத்தொடரில் லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியாவும் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. மழையின் காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டி 20 ஓவர்களாக் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் ஜெயித்த இந்தியா, இலங்கையை பேட் செய்ய பணித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமீகா 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் கனிஷ்க் செள்கான் மற்றும் ஹெனில் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே (7), வைபவ் சூர்யவன்ஷி (9) ரன்களில் ஏமாற்றினாலும், ஆரோன் ஜார்ஜ் மற்றும் விகான் மல்கோத்ரா இணை சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெற அழைத்ததுடன் இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்றது. இறுதியில் இந்திய அணி 18 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஆரோன் ஜார்ஜ் 58 ரன்களும், விகான் மல்கோத்ரா 61 ரன்களும் எடுத்து இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் ரஷித் நிமிஷரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இன்னொரு புறம், 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியும் மழை காரணமாக 27 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதன்படி முதலில் ஆடிய வங்கதேசம் 26.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுபான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, அந்த ரன்களை 16.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்தது. அவ்வணியில் தொடக்க வீரர் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இவ்வணி, நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 8 முறை சாம்பியன் பட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதில், ஒருமுறை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பட்டம் பெற்றன. இந்த நிலையில், இந்திய அணி 9வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. பாகிஸ்தான் அணி 5வது முறையாக நுழைந்துள்ளது. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த 2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சந்தித்தன. அந்தப் போட்டி சமன் ஆனதால், இரு அணிகளும் சாம்பியனாகின. இந்த நிலையில், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் சந்திக்க இருப்பதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரின் லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. அதற்குப் பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா அல்லது மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக பட்டத்தை வெல்லுமா என நாளை தெரிந்துவிடும்.