yashasvi - gill - padikkal - sarfaraz - rohit
yashasvi - gill - padikkal - sarfaraz - rohit Cricinfo
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக சம்பவம் செய்த டாப் 5 வீரர்கள்! முதல்முறையாக இந்திய அணி படைத்த அசாத்திய சாதனை!

Rishan Vengai

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மார்ச் 7ம் தேதி இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்த இங்கிலாந்து அணி, குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் இருவரின் சுழல் மேஜிக்கால் 218 ரன்களுக்கே ஆல்அவுட்டாகினர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இந்தியாவின் டாப் 5 வீரர்களும் அரைசதமடித்து அசத்தல்!

இங்கிலாந்தை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருமுனையில் ரோகித் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி அரைசதமடித்து அசத்தினார். இந்த போட்டியிலும் சதத்தை நோக்கி செல்வார் என்று நினைத்தபோது, 57 ரன்னில் ஸ்டம்ப் அவுட்டாகி வெளியேறினார் ஜெய்ஸ்வால்.

jaiswal

பின்னர் கைக்கோர்த்த கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமாக விளையாடிய ரோகித் சர்மா 13 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி தன்னுடைய 12வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதேபோல சுப்மன் கில்லும் இந்த தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தை எடுத்துவந்து மிரட்டினார். இருவரும் சதமடித்த உடனே வெளியேறினாலும், அடுத்தடுத்து களத்திற்கு வந்த சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அரைசதமடிக்க இந்திய அணி 400 ரன்களை எட்டியது.

gill

டாப் ஆர்டர் வீரர்கள் ரோகித் சர்மா (103), சுப்மன் கில் (110), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (57), சர்ஃபராஸ் கான் (56), தேவ்தத் படிக்கல் (65)” முதலிய ஐந்து பேரும் அரைசதமடித்து 15 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரத்யேக சாதனையை படைத்துள்ளனர்.

15 வருடங்களுக்கு பிறகு பிரத்யேக சாதனை!

ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸில் டாப் 5 இந்திய வீரர்கள் அனைவரும் அரைசதமடித்திருப்பது இது 4வது முறை. கடந்தமுறை இந்த நிகழ்வு 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ”முரளி விஜய் (87), விரேந்திர சேவாக் (293), ராகுல் டிராவிட் ( 74), சச்சின் டெண்டுல்கர் (53), விவிஎஸ் லஷ்மண் (62)” முதலிய டாப் 5 இந்திய வீரர்களும் அரைசதமடித்து அசத்தியிருந்தனர்.

padikkal

15 வருடங்களுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டாலும், ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை முதலிய அணிகளுக்கு எதிராக மட்டுமே நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக இந்த சாதனையை இந்திய வீரர்கள் படைத்து அசத்தியுள்ளனர். இங்கிலாந்தின் எதிர்காலமாக பார்க்கப்படும் பாஸ்பால் கிரிக்கெட்டுக்கு எதிராக இதை செய்திருக்கும் முதல் அணி இந்தியா மட்டும் தான்.

sarfaraz khan

ஒரே இன்னிங்ஸில் இந்தியா டாப் 5 வீரர்கள் அரைசதமடித்த போட்டிகள்:

1. vs ஆஸ்திரேலியா- கொல்கத்தா (1998)

2. vs நியூசிலாந்து- மொஹாலி (1999)

3. vs இலங்கை - மும்பை (பிரபோர்ன்) (2009)

4. vs இங்கிலாந்து - தர்மசாலா (2024)

இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.