இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2 முக்கிய வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த 2 வீரர்களின் சேர்க்கை இந்திய அணியின் பலத்தை அதிகரித்து, பாகிஸ்தானுக்கு சாவல் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பயமே இல்லாத டி20 கிரிக்கெட்டை விளையாடி வரும் இந்திய அணி 61 போட்டிகளில் 53 வெற்றிகளை ருசித்துள்ளது. வெற்றி சதவீதத்தை பொறுத்தவரை வேறு எந்த அணியும் இந்தியாவை நெருங்கி வரவில்லை. தொடக்க வீரர்கள் தொடங்கி 8ஆவது வீரர் வரை அதிரடிக்கு பஞ்சமில்லாமல் இந்திய அணி ஜொலித்து வருகிறது.
இப்படியான ஒரு தலைசிறந்த அணியை தான் இன்றைய டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொள்ளவிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை 8 மோதல்களில் இந்தியாவை ஒருமுறை மட்டுமே பாகிஸ்தான் வென்றுள்ளது.
ஆனால் அதேநேரம் இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக குறைந்த ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடுவதோடு, அதிகப்படியான விக்கெட்டுகளையும் பறிகொடுப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீத்தும் திட்டத்தோடு களம்காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானிடம் நல்ல ஸ்பின்னர்கள் 4 பேர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கை மண்ணில் இந்தியா சுமாரான பேட்டிங் ரெக்கார்டும், பாகிஸ்தான் நல்ல பேட்டிங் ரெக்கார்டும் வைத்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் திட்டத்தை உடைக்கும் வகையில் 2 முக்கியமான வீரர்களை இந்தியா களமிறக்க திட்டமிட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நமீபியாவிற்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக விளையாடிய சஞ்சு சாம்சன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் அபிஷேக் சர்மா ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை சஞ்சுவின் இருப்பு ஏற்படுத்தவில்லை.
பவர்பிளேவில் 200 ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடும் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேம் சேஞ்சராக இருப்பார் என்பதால் அவரை மீண்டும் களமிறக்கவிருக்கிறது இந்தியா.
அதேபோல இந்திய அணியின் ஸ்பின் அட்டாக்கை வலுப்படுத்தும் வகையில் நட்சத்திர ஸ்பின்னர் குல்தீப் யாதவை மீண்டும் ஆடும் லெவனில் இணைக்கவிருக்கிறது இந்திய அணி. இந்த 2 மாற்றங்கள் பாகிஸ்தானுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதால், இந்தியா முழு பலத்துடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது.