ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து வெற்றிக் கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையே சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இது மேலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அதிலும், 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் 146 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்ஹான் 57 ரன்களும், ஜமான் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், பும்ரா, வருண், அக்ஷர் ஆகியார் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இந்த முறை 5 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. அதேபோல் சுப்மன் கில் 12 ரன்களிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் நடையைக் கட்ட, இந்தியா ஆரம்பத்திலேயே தள்ளாட்டத்தைச் சந்தித்தது. எனினும், திலக் வர்மா இந்தப் போட்டியில் நங்கூரமாய் இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக சஞ்சு சாம்சன் (24 ரன்கள்), ஷிவம் துபே (33 ரன்கள்) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றதுடன் சாம்பியன் கோப்பையையும் 9வது முறையாகத் தட்டிச் சென்றது. இந்த தொடரில் எல்லாப் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணியை மட்டும் மூன்று முறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், ஆசியக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து வெற்றிக் கோப்பையைப் பெற மறுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோப்பை வழங்க நக்வி மேடைக்கு வந்தபோது, இந்திய வீரர்கள் 15 அடி தூரத்தில் விலகி நின்று கோப்பையை வாங்க மறுத்தனர். பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில், “இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையை பெற மாட்டோம். அதேசமயம், இந்தியாவுக்கான கோப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். போட்டியில் வென்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாமல் போனது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.
அதேநேரத்தில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதில் விளைவு ஒன்றுதான்; இந்தியா வெற்றி பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.