இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் இரண்டு முறை washout செய்த முதல் மற்றும் ஒரே அணி என்ற உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி washout செய்துள்ளது. இதன்மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் இரண்டு முறை washout செய்த முதல் மற்றும் ஒரே அணி என்ற உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் இந்தியாவை விட பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டது.
கவுகாத்தியில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்டில், 549 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 5-ஆம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது. இதன்மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்திய அணியின் மோசமான தோல்விக்கு முக்கியமான காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றமே முன்னிலையில் இருக்கிறது. அதற்கு முக்கிய உதாரணம், தென்னாப்ரிக்காவின் ப்ரைம் டைம் பந்துவீச்சாளரான ஜேசன் 7 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் விளாசியிருந்த நிலையில், இந்திய வீரர்கள் ஒருவர்கூட சதம் அடிக்கவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை. தென்னாப்ரிக்க அணியில் கேப்டன் பவுமா முக்கியமான நேரத்தில் அரைசதம் அடித்திருந்தார். முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமே கே.எல்.ராகுல் அடித்த 39 (119) ரன்களும், வாஷிங்டன் எடுத்த 31 (92) ரன்களே ஆகும். இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 31 (92) ரன்கள் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை களத்தில் ஒரு வீரர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து நிற்கிறார், எத்தனை பந்துகளை சந்திக்கிறார் என்பதை பொறுத்தே அவரது திறமை பார்க்கப்படும்.
உதாரணத்திற்கு ராகுல் டிராவிட்டின் ஆட்டம். ஆனால் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் களத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். 50 பந்துகளை சந்தித்து தாக்குப்பிடிப்பது என்பதே அரிதாக இருந்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்ந்து மொத்தமே 3 இந்திய வீரர்கள்தான் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகளை சந்தித்து இருக்கிறார்கள். கே.எல்.ராகுல் 39 (119), குல்தீப் 19 (134), சாய் சுதர்சன் 14 (139) ஆகிய மூவர். இதிலும் குல்தீப் விளையாடிய ஆட்டத்தைக்கூட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பவுமாவின் நிலைத்து ஆடிய ஆட்டமே தென்னாப்ரிக்காவுக்கு வெற்றியை தேடித் தந்தது. அதுபோன்ற ஓர் ஆட்டத்தை இந்திய அணியில் யாரும் ஆடவில்லை.
மொத்தம் 4 இன்னிங்ஸ் ஆடப்பட்டுள்ள நிலையில், ஒரு வீரர் ஒரு இன்னிங்ஸிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், ரிஷப் பண்ட் 27 (24), 2(13), 7 (13), 13 (16) ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். அதுவும் அடித்து ஆட முயன்று தொடர்ச்சியாக அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்டைவிட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஜூரல். அவர் 14, 13, 0, 2 என 15 ரன்களைக்கூட எட்டாமல் ஆட்டமிழந்தார்.
நிதிஷ் ரெட்டியும் 10 (18), 0 (3) என ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுலும் 39 (119), 1 (6), 22 (63), 6 (29) என ஏமாற்றினார். ஆல் ரவுண்டராக ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பும்ரா, அதன்பிறகு தவறவிட்டார். சாய் சுதர்சன் 15 (40), 14 (139) என சொதப்பினாலும் களத்தில் நீண்டநேரம் நின்று சற்றே ஆறுதல் அளித்தார்.
இந்திய வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப்களை அமைக்காததும் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. விக்கெட்டுகள் சரியும்போது எதாவது ஒரு ஜோடி அதனை அப்படியே நிறுத்த வேண்டும். குறிப்பாக முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாகவே தொடங்கியது. முதல் விக்கெட் வீழ்ந்த பிறகு வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல் ஜோடி 54 ரன்களுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விழாமல் ஆடினர். ஆனால், 75ஆவது ரன்னில் இரண்டாவது விக்கெட் வீழ்ந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது.
அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்துகொண்டே சென்றது. இரண்டாவது போட்டியை பொறுத்தவரை குல்தீப் யாதவ் - வாஷிங்டன் சுந்தர் அமைத்ததுதான் சிறப்பான பார்ட்னர்ஷிப். 208 பந்துகளை சந்தித்து 72 ரன்கள் எடுத்தனர். ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் குல்தீப் சிறப்பாக தடுப்பாற்றம் ஆடினார். இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கியது, அதிக ஆல்ரவுண்டர்களை கொண்டு ஆடியது, ஷமி போன்ற வீரர்கள் இல்லாதது என இன்னும் பல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இந்திய அணிக்கு இது நிச்சயம் மறக்கமுடியாத தோல்வியே!