இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2வது ஒருநாள் போட்டியில் இன்று அடிலெய்டு மைதானத்தில் மோதுகின்றன..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்து. கேப்டனாக கில் தன்னுடைய முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் தோல்வியை பதிவுசெய்தார்.
இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன..
போட்டி நடைபெறவிருக்கும் அடிலெய்டு மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியே கண்டதில்லை.. அடிலெய்டு ஓவலில் ஆஸ்திரேலியாவை ஆறு முறை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இந்த மைதானத்தில் தோற்றதில்லை.
அதேபோல ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானம் விராட் கோலியின் கோட்டையாக இருந்துள்ளது. அவர் இங்கு அனைத்து வடிவத்திலும் 5 சதங்கள் உட்பட 975 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்தப்போட்டியில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது. ரோகித் மற்றும் கோலி கூட்டணி இன்றைய போட்டியில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது..