india best moments in champions trophy PT
கிரிக்கெட்

’ஐசிசி விதியால் வீழ்ந்த கங்குலி; துள்ளிகுதித்த தோனி’- இந்தியாவும் சாம்பியன்ஸ் டிராபியும் ஒரு பார்வை!

ஐசிசியின் சிறந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு அசாத்திய தொடர் என்பதால் ’சாம்பியன்ஸ் டிராபி’ தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது.

Rishan Vengai

சாம்பியன்ஸ் டிராபி - சாம்பியன் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர். அதனால் தான் ஐசிசி உலகக்கோப்பை தொடர்களை விட ’சாம்பியன்ஸ் டிராபி’ தொடரானது கிரிக்கெட் வல்லுநர்களுக்கு இடையேயும், ரசிகர்களிடையேயும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக உலகக்கோப்பை தொடரில் பல்வேறு நாடுகள் பங்குபெற்று விளையாடும், ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை ஐசிசியின் தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகளே பங்குபெற்று டிராபிக்காக பலப்பரீட்சை நடத்தும்.

champions trophy

மற்ற லீக் போட்டிகளை போல அதிகப்போட்டிகள் என இல்லாமல், ’கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல மூன்றே லீக் போட்டிகள், அதில் ஒன்றில் தோன்றால் கூட எவ்வளவு பெரிய சாம்பியன் அணியானாலும் நாக்அவுட் சுற்றுக்கு செல்வது எட்டாத ஒன்றாகிவிடும். அதனால் ஒவ்வொரு லீக் போட்டியுமே இங்கு கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டிதான்.

அந்தவகையில் சாம்பியன்ஸ் டிராபிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான பிரிக்க முடியாத தருணங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..

மழையால் வீழ்ந்த கேப்டன் கங்குலி..

ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்கள் என்று பட்டியலிட்டால் பெரும்பாலானோர் கபில்தேவ்க்கு பிறகு, தோனியை தான் குறிப்பிடுவார்கள். இதற்கிடையில் 2002 சாம்பியன்ஸ் டிரோபியை இந்தியா வென்றது, ஐசிசி கோப்பை வென்ற ஒரு கேப்டனாக கங்குலியும் இருக்கிறார் என்பது பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாமலே போய்விட்டது.

ஒருவேளை மழையால் அந்த ஆட்டம் தடைபடாமல் போயிருந்தால், இந்தியா நிச்சயம் கோப்பை வென்று ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்களில் கங்குலியின் பெயரும் தவிர்க்க முடியாதாக ஒன்றாக இருந்திருக்கும்.

2002 சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இலங்கையில் இரண்டு பைனல்களாக நடைபெற்றது. மழையால் முதலில் நடைபெற்ற இறுதிப்போட்டி தடைபட்டது, அதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது, இந்தியா 2 ஓவர்களுக்கு 14/0 என களத்தில் இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரிசர்வ் டேவான மறுநாளுக்கு சென்றது.

ஆனால் ஆட்டம் அப்போது Resume செய்யப்படாமல் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடத்தப்பட்டது. மீண்டும் இலங்கை முதலில் பேட்டிங் செய்து 227 ரன்கள் சேர்த்தது. இந்தியா 38/1 என்ற நிலையிலிருந்த போது மீண்டும் மழைக்குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டதால், கோப்பையானது இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கங்குலி

ஒருவேளை அப்போது மறுநாள் ஆட்டம் Resume செய்யப்பட்டு, இந்தியா 245 ரன்களை இலக்காக துரத்தி விளையாடியிருந்தால் மீண்டும் மழை குறுக்கிடுவதற்குள் போட்டி முடிந்து இந்தியா வென்றிருக்கும். அந்த தொடரில் கங்குலி தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியே தழுவாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

கங்குலி தலைமையில் இந்தியா 2002 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தனியாக வெல்லாவிட்டாலும், 1983-க்கு பிறகு இந்தியா வென்ற பெரிய ஐசிசி கோப்பையாக 2002 சாம்பியன்ஸ் டிராபியும் இந்திய ரசிகர்கள் மனதில் நிற்கிறது.

துள்ளிக்குதித்த தோனி..

2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் தோனி, 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப்போட்டிவரை இந்தியாவை அழைத்துச்சென்றார்.

2013 champions trophy

அதுவரை எந்த கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை, அதேபோல 2002-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கனவும் தோனிக்கு இருந்தது. 2002-ம் ஆண்டை போலவே 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியும் மழையால் பாதிக்கப்பட்டது.

2013 champions trophy

மழையால் ஆட்டம் நடக்குமா நடக்காதா என்ற நிலைக்கு செல்ல, ஒருவழியாக 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆட்டம் நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 31, விராட் கோலி 43 மற்றும் ஜடேஜா 33 ரன்கள் அடித்தனர்.

2013 champions trophy

இரண்டாவது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 17.2 ஓவர் வரை 110/4 என வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்து வெற்றிபெற 16 பந்துகளில் 20 ரன்கள் என இருந்தபோது இந்திய ரசிகர்கள் கனவு கிட்டத்தட்ட உடைந்திருந்தது. ஆனால் 17.3, 17.4 என அடுத்தடுத்த பந்தில் மோர்கன், போபரா இருவரையும் இஷாந்த் ஷர்மா வெளியேற்ற ஆட்டத்திற்குள் வந்தது இந்தியா.

அடுத்துவந்த ஜோஸ் பட்லரை கோல்டன் டக்கில் போல்டாக்கி வெளியேற்றிய ரவிந்திர ஜடேஜா, ஆட்டத்தை மேலும் இந்தியாவின் பக்கம் திரும்பினார். அதற்குபிறகு டெய்ல் எண்டர்கள் மேல் தன்னுடைய கேப்டன்சியால் அழுத்தத்தை அதிகரித்த தோனி, இங்கிலாந்தின் கையிலிருந்த வெற்றியை இந்தியாவின் கைகளுக்கு கொண்டுவந்தார். இறுதிஓவரில் இறுதிபந்தை அஸ்வின் வீசி இந்தியா வெற்றிபெறும் போது, தோனி துள்ளிக்குதித்ததை இதுவரை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாது.

விராட் கோலி கோப்பை வென்ற பிறகு கங்கம் ஸ்டைல் ஸ்டெப்களில் டான்ஸ் ஆடினார். ஒட்டுமொத்த இந்தியாவும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

3வது கோப்பை வெல்லுமா இந்தியா?

1998 முதல் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபியை அதிகமுறை வென்ற அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 முறை வென்றுள்ளன.

இந்நிலையில் 3வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் களம்காண்கின்றன. அதேபோல இரண்டாவது கோப்பை நோக்கி பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், முதல் கோப்பையை நோக்கி இங்கிலாந்து அணியும் பங்கேற்கவிருக்கின்றன.

2013 இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிந்திர ஜடேஜா, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை லீக் போட்டியில் எதிர்கொள்ளவிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணிகள்:

1998 – தென்னாப்பிரிக்கா (வின்னர்) – வெஸ்ட் இண்டீஸ் (ரன்னர்)

2000 – நியூசிலாந்து (வின்னர்) – இந்தியா (ரன்னர்)

2002 – இந்தியா மற்றும் இலங்கை (கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது)

2004 – வெஸ்ட் இண்டீஸ் (வின்னர்) – இங்கிலாந்து (ரன்னர்)

2006 – ஆஸ்திரேலியா (வின்னர்) – வெஸ்ட் இண்டீஸ் (ரன்னர்)

2009 – ஆஸ்திரேலியா (வின்னர்) – நியூசிலாந்து (ரன்னர்)

2013 – இந்தியா (வின்னர்) – இங்கிலாந்து (ரன்னர்)

2017 – பாகிஸ்தான் (வின்னர்) – இந்தியா (ரன்னர்)

அதிகமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியாக இந்தியா (4 முறை) நீடிக்கிறது..