யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய முதல் போட்டியில் கத்துக்குட்டி அணிகளைப் பந்தாடி உள்ளன. இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் அணி மலேசியாவையும் வீழ்த்தியுள்ளது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று துபாயில் தொடங்கியது. துபாயில் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போட்டியைத் தொடங்கின. அதன்படி இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் மலேசிய அணியையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 சிக்சர்கள் 5 பவுண்டரிகளை நாலாபுறமும் சிதறடித்த சூர்யவன்ஷி 56 பந்தில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து 14 சிக்சர்கள் 9 பவுண்டரிகளை பறக்கவிட்ட சூர்யவன்ஷி இரட்டை சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டபோது, 95 பந்தில் 171 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஆரோன் ஜியார்ஜ், மல்கோத்ரா இருவரும் தலா 69 ரன்கள் விரட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்களை குவித்தது இந்திய அணி. பின்னர் கடுமையான இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. என்றாலும் நடுநிலை ஆட்டக்காரரான ப்ரித்திவி முத்து மட்டும் சற்று தாக்குப்பிடித்து அரைசதம் அடித்து வெளியேறினார். அவருக்குப் பின் இறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினாலும், இறுதியாய் களமிறங்கிய உத்திஷ் சூரி சற்றே மிரட்ட ஆரம்பித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தபோதும் அவ்வணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மறுபுறம், தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் மலேசிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த மலேசியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் தொடக்க வீரர் சமீர் மின்காஸ் ஆட்டமிழக்காமல் 177 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடக்கம். அவருக்குத் துணையாக அகமது ஹுசைன் 132 ரன்கள் எடுத்தார்.
பின்னர், கடுமையான இலக்கை நோக்கி ஆடிய மலேசிய அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் விரைவிலேயே சரிந்தது. 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. குறிப்பாக, அவ்வணியில் எந்த வீரர்களும் இரட்டை இலக்க ரன்களைத் தொடவே இல்லை. அதிகபட்சமாக இரண்டு வீரர்கள் மட்டும் தலா 9 ரன்களை எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானும் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.