இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ Cricket Association of Pondicherry
கிரிக்கெட்

இந்தியா A-வின் மோசமான பந்துவீச்சு.. சொந்த மண்ணில் AUS A-விடம் ODI தொடர் இழப்பு!

இந்தியா ஏ அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

Rishan Vengai

ஆஸ்திரேலியா ஏ அணியிடம் தொடர் தோல்வியை சந்தித்த இந்தியா ஏ அணி, பந்துவீச்சில் பலவீனமாக இருந்தது. கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றாலும், பிசிசிஐ பவுலிங் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலியா ஏ அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதலில் நடத்தப்பட்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்தது. முதல் 2 போட்டியிலும் ரஜத் பட்டிதார் ஒருவர் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியால் 226 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்த இந்தியா ஏ அணி கடைசியில் ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது.

இந்திய பந்துவீச்சு பலவீனமாக இருப்பது சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாமல், முதல்தர போட்டிகளிலும் தொடர்வது பிரச்னைக்கான தீர்வு எங்கே இருக்கிறது என தேடும்நிலையில் பிசிசிஐ இருப்பது தெரிகிறது. பேட்டிங்கிற்கு சாதனமான விளையாட்டாக கிரிக்கெட் மாறியிருக்கும் சூழலில் பந்தை எடுத்து வீசுவதற்கு வீரர்கள் உருவாக ஆடுகளத்தில் மாற்றம் அல்லது பழைய பந்துவீச்சு முறையை பிசிசிஐ கொண்டுவர வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.