bumrah - bangladesh web
கிரிக்கெட்

”பும்ரா இல்லாதது இந்தியாவை வீழ்த்த வங்கதேசத்திற்கு சரியான வாய்ப்பு..” – மூத்த வங்கதேச வீரர்!

பும்ரா அணியில் இல்லாதது இந்தியாவை வீழ்த்த வங்கதேசத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக மூத்த வங்கதேச வீரர் கூறியுள்ளார்.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து காயம் காரணமாக இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு மாற்றுவீரராக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ரானா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பும்ரா

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி காயத்திலிருந்து கம்பேக், அனுபவமில்லாத ஹர்சித் ரானா என இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒரே நம்பிக்கையாக ஃபார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங் இருந்துவருகிறார்.

இந்த சூழலில் பும்ரா இல்லாதது இந்தியாவை வீழ்த்த வங்கதேசத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக மூத்த வங்கதேச வீரர் இம்ருல் கெய்ஸ் கூறியுள்ளார்.

பும்ரா இல்லாதது கிடைத்த சரியான வாய்ப்பு..

39 டெஸ்ட், 78 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ், பிடிஐ உடன் பேசும்போது பும்ரா இல்லாத சூழல் வங்கதேசத்திற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என பேசினார்.

இம்ருல் கெய்ஸ்

வங்கதேசம் மற்றும் இந்தியாவுடனான மோதல் குறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியா ஒரு வலுவான அணி, சிறந்த பந்துவீச்சு தாக்குதல் மற்றும் பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஆனால் அவர்களின் அணியில் பும்ரா இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக என்ன செய்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் இல்லாதது வங்கதேசத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று பிடிஐ உடன் கூறியுள்ளார்.

Tanzim Hasan Sakib

வங்கதேசத்தை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சு தாக்குதலில் அனுபவம் வாய்ந்த டஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருவரும் லீட் செய்கின்றனர். ஆனால் இவர்களை விட சமீபத்தில் சிறந்த ஃபார்மில் இருந்துவரும் 22 வயது வேகப்பந்துவீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப், இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேச அணி அரையிறுதிப்போட்டிவரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.